×

தீயணைப்பு வீரரை வெட்டி நகை பறிப்பு

சென்னை: புளியந்தோப்பு சிவராஜபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (48). சென்னை துறைமுகம் தீயணைப்பு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே வாக்கிங் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், சீனிவாசனை கத்தியால் வெட்டி, அவர் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பினர். போலீசார் விசாரணையில், புளியந்தோப்பு சுந்தரபுரம் 1வது மெயின் தெருவை சேர்ந்த அப்பு (எ) நொண்டி அப்பு (29), காந்தி தெருவை சேர்ந்த ராஜேஷ் (25) வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

* அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த தேன்மொழி (44), வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த ஒருவர், தேன்மொழி கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்துள்ளார். சுதாரித்து கொண்ட தேன்மொழி, சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கொள்ளையனுடன் போராடி உள்ளார். இதனால், செயின் 2 துண்டாக அறுந்தது. கையில் சிக்கிய 3 சவரன் சங்கிலியுடன் ஆசாமி பைக்கில் தப்பினார்.
* பெசன்ட் நகரை சேர்ந்த மனோஜ் (25) என்பவர், எதிர் வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
* தேனாம்பேட்டை பாபு தெருவை சேர்ந்த அரசு ஊழியர் ரேணுகா சாந்தி (53) என்பவர் வீட்டில் வைத்திருந்த 10 சவரன் நகை நேற்று முன்தினம் மாயமானது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.  
* தேனாம்பேட்டையில் குமார் (40) என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த 200 ஹார்டுடிஸ்க் மற்றும் மானிடர் கொள்ளையடிக் கப்பட்டது.

கோலி விழுங்கிய குழந்தை சாவு

வேளச்சேரி அடுத்த நன்மங்கலம் அஸ்தினாபுரம் சாலை 6வது தெருவை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது 3 வயது மகன் கனீஷ், கடந்த மாதம் 31ம் தேதி வீட்டின் அருகே விளையாடியபோது, அங்கு கிடந்த கோலி குண்டை விழுங்கி உள்ளான். கோலி தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினான். அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அறுவை சிகிச்சை மூலம் கோலி குண்டை அகற்றினர். பின்னர், மேல் சிகிச்சைகாக எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் கனீஷ் நேற்று பரிதாபமாக இறந்தான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fireman , jewelry flush
× RELATED காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில் 256 பேர் தேர்வு