×

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: மனுவை திருத்தி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சில விவரங்கள் விடுபட்டுள்ளதால், அதை திருத்தி 2 வாரத்தில் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், 161வது சட்ட விதியின் கீழ் இந்த விவகாரத்தில் அவர் இறுதி முடிவை எடுப்பார் என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் 6ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசும் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக இன்னும் அவர் முடிவு எடுக்காததால், ஆளுநர் அலுவலகத்தில் தமிழக அரசின் பரிந்துரை  நிலுவையில் உள்ளது.

மேற்கண்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘ராஜிவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒரு தீர்க்கமான பதிலை வெளியிட வேண்டும். இல்லையேல், அரசியல் சாசனம் 435வது சட்ட விதியில் மாநிலத்திற்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசே அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும்’ என  குறிப்பிடப்பட்டது.  இந்த தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்கா நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம் மற்றும் ராம சுகந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டே மேல்முறையீடு செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மனு, கடந்தாண்டு செப்டம்பர் 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் சில திருத்தங்களை செய்து கூடுதல் ஆவணங்களையும்,  தற்போதைய அமைச்சரவையின் தீர்மானத்தையும் ஒன்றாக இணைத்து புதிய மனு தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

7பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசும் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘7 பேர் விடுதலை தொடர்பாக எந்த ஒரு மனுவும் மத்திய அரசிடம் நிலுவையில் கிடையாது.  இதில், ராஜிவ் காந்தி கொலையின்போது அப்பாஸ் உட்பட பாதிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தற்போது காலாவதியாக விட்டது. இதனை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.  இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர். இதை யடுத்து  மத்திய அரசு  வழக்கறிஞர் துஷார் மேத்தா, அதற்கு அவகாசம் தரும்படி கேட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court , The Periyalvallan, the release of 7 persons, the federal government, the Supreme Court
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...