×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இலங்கை பெண் தரிசனம் செய்தாரா? : தந்திரி, உளவுத்துறை முரண்பட்ட தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு இலங்கையை சேர்ந்த 47 வயது பெண் தரிசனம் செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தரிசனம் செய்யவில்லை என்று உளவுத்துறை போலீசாரும், தந்திரியும் மறுத்துள்ளனர். சபரிமலையில் பிந்து, கனகதுர்கா என 2 இளம்பெண்கள் கடந்த 2ம் தேதி அதிகாலை தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரளாவில் நடந்த பந்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இது தொடர்பாக நடந்த கல்வீச்சில் பாஜ தொண்டர் சந்திரன் உண்ணித்தான் மற்றும் சிகிச்சை கிடைக்காமல் மூதாட்டி பாத்திமா ஆகியோர் இறந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேமம் பிராவச்சம்பலம் பகுதியில் பாஜ வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் கண்டன பேரணி நடந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் எஸ்எப்ஐ தலைவர் ஆகாஷ் (22) என்பவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், 7 பேர் காயமடைந்தனர். ஊர்வலத்தின் மீது ஒரு வீட்டில் இருந்து குண்டு வீசப்பட்டதாக மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கூறினர். ஆனால், ஊர்வலத்தில் சென்றவர்கள் வைத்திருந்த குண்டுதான் தவறி விழுந்து வெடித்ததாக கூறப்படுகிறது. மலபாரில் ேதவசம்போர்டு உறுப்பினர் சசிகுமார் வீட்டின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இலங்கையை சேர்ந்த சசிகலா (47), அவரது கணவர் சரவண மாறன் ஆகியோர் தங்கள் மகனுடன் சபரிமலை வந்தனர். பம்பை காவல் நிலையம் வந்த சசிகலா, தனக்கு 47 வயது ஆகியுள்ளது. கற்பப்பை நீக்கப்பட்டு விட்டது. எனவே, தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டார். இதையடுத்து, இரவு 10 மணியளவில் அவரை பாதுகாப்புடன் சரங்குத்தி வழியாக போலீசார் அழைத்து சென்றனர். அவர்கள் மரக்கூட்டம் அடைந்தபோது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சசிகலாவை போலீசார் திருப்பி அழைத்து சென்றதாக தகவல் வெளியானது. ஆனால், சசிகலா 18ம் படி ஏறி சென்று தரிசனம் நடத்தியதாக ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. சசிகலா கோயிலை சுற்றி நடந்து செல்லும் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. அடுத்த சிறிது நேரத்தில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சசிகலா சபரிமலையில் தரிசனம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கேரளாவில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. ஆனால், இந்த தகவலை தந்திரி மற்றும் மேல்சாந்தி மறுத்தனர். சசிகலா தரிசனம் நடத்தவில்லை என்று தந்திரி கூறினார். அதேபோல், மாநில உளவுத்துறை போலீசாரும் தெரிவித்தனர்.
 
நேற்று முன்தினம் இரவு நடை அடைப்பதற்கு 10 நிமிடம் முன் 10.51 மணியளவில் ஒரு பெண் கோயில் அருகே நடந்து செல்லும் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் இருந்தது. ஆனால், அவர் பம்பையில் இருந்து செல்லும்போது நீல நிற இருமுடி கட்டு வைத்திருந்தார். வீடியோவில் காட்டப்பட்ட பெண்ணிடம் கருப்பு நிற இருமுடி இருந்தது. சசிகலா கண்ணாடி அணியாமல் வந்திருந்தார். ஆனால், வீடியோவில் கண்ணாடி அணிந்திருந்தார். இதனால் அது சசிகலா இல்லை என்று உளவுத்துறை போலீசார் கூறுகின்றனர். இதனால் சசிகலா தரிசனம் ெசய்தாரா இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

குடகு விடுதியில்
தங்கினார்களா?


சபரிமலையில் கடந்த புதன்கிழமை கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்வதற்கு முன்பாக, கர்நாடகாவில் குடகு  மாவட்டம், விராஜ்பேட்டையில் உள்ள  சீதாலட்சுமி விடுதியில் கடந்த 29ம் தேதி  அவர்கள் அறை எடுத்து  தங்கியுள்ளனர். அவர்களுடன் ஒரு ஆண் நண்பரும் இருந்துள்ளார்.  ஆனால், அவர்  விடுதியில் உள்ள அறையில் தங்கவில்லை. பெண்களுக்கு ேதவையான உதவிகளை அவர்தான்  செய்ததாக கூறப்படுகிறது. 31ம் தேதி விடுதியை காலி செய்து விட்டு அந்த பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் தங்கள் விடுதியில் தங்கியதை விடுதி ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர்.

தரிசிக்க விடாமல் தடுத்து விட்டனர்


இலங்கை பெண் சசிகலா பம்பையில் அளித்த பேட்டியில், ‘‘பம்பை, நிலக்கல்லில் எனக்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி இருந்தும், என்னை போலீசார் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை. நான் 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி வந்துள்ளேன். என்னை தடுத்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்’’ என்று மிகவும் ஆவேசமாக கூறினார்.

தந்திரியிடம் விளக்கம் கேட்க முடிவு

சபரிமலையில் கடந்த 2ம் தேதி பிந்து, கனகர்கா தரிசனம் செய்ததையடுத்து  நடை சாத்தப்பட்டு பரிகார பூகைள் நடத்தப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. தந்திரியின் இந்த செயலுக்கு முதல்வர் பினராய்விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சபரிமலை கோயில் நடை அடைக்கப்பட்டது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தந்திரிக்கு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : woman darshan ,Sri Lankan ,Ayyappan ,Sabarimala , Did the Sri Lankan woman ,darshan , Ayyappan temple in Sabarimala?,: Tantri, Intelligence Information
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்