×

பேரையூர் பகுதியில் பருத்தி விலை திடீர் சரிவு ; விவசாயிகள் கவலை

பேரையூர்: பேரையூர் பகுதியில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதியில் மழை நம்பியே விவசாயம் நடைபெறுகிறுகிறது. வானம்பார்த்த பூமியான இப்பகுதியில் பருவமழையை நம்பி கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்ற தானிய வகைகள் மற்றும் பருத்தி, பயிறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். 90 நாட்களில் மகசூல் கொடுக்கக்கூடியது.

தற்போது பருத்தி அறுவடை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு கிலோ பருத்தி  ரூ.46 விற்பனையானது. கடந்த சில தினங்களாக திடீரென விலை குறைந்து ரூ.37க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பி.சொக்கம்பட்டி பருத்தி விவசாயி தமிழன் கூறுகையில், ‘நான் ஒரு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளேன். இதற்கு மூன்றுமுறை உழுது நிலத்தை சுத்தப்படுத்தி, பருத்தி விதை நட்டு செடி வளரும் பருவத்தில் மழையில்லாமல் போனது. இதனால் அருகிலுள்ள விவசாயியிடம் ஒரு மணிக்கு ரூ.60 என தண்ணீர் பாய்ச்சி செடிகளை காப்பாற்றினேன். தற்போது அறுவடை நடந்து வரும் வேளையில் விலை குறைந்துள்ளது. இதனால் செலவு செய்த தொகைக்கு கூட மகசூல் கிடைக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. விலை குறைந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

பருத்தி வியாபாரி முத்துப்பாண்டி கூறுகையில், ‘நாங்கள் வாங்கும் பருத்தி ஈரப்பதமாக இருந்தால் எங்களிடம் வாங்கும் மொத்த வியாபாரிகள் குறைத்து எடுக்கின்றனர். முந்தைய காலங்களில் ராஜபாளையம் பகுதியிலிருந்து மொத்த வியாபாரிகள் வந்து மில்லிற்கு வாங்கி செல்வர். தற்போது ராஜபாளையத்தில் இருந்து வியாபாரிகள் வருவதில்லை. மாறாக தேனி பகுதியிலுள்ள மில்லிற்கு மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். நாங்கள் சில்லரை வியாபாரிதான். அதிக விலைக்கு வாங்கிவிட்டால் நஷ்டமாகி விடுவோம். இதனால் அன்றாடம் மில் விலைக்கு ஏற்றாற்போல் விவசாயிகளிடம் பருத்தி வாங்கி வருகிறோம்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : region ,Peraiyur , Peraiyur, cotton prices have fallen, farmers are worried
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!