×

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய அரசு தகவல்

டெல்லி: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் 27ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,258 கோடியில் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 27ம் தேதி நடக்க இருப்பதாகவும், இதில் பங்கேற்க பிரதமர் மோடி, மதுரை வருவதாகவும் தகவல்கள் தெரிவிகக்ப்பட்டுள்ளன. இதன்படி மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் குறித்து மத்திய அரசு விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் ரூ.1,264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் அளித்ததிலிருந்து 45 மாதங்களுக்குள் மருத்துவமனையை முழுவதும் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 750 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை வடிவமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த மருத்துவமனையில் மாதத்திற்கு ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற முடியும், அதேபோல் ஆயிரத்து 500 பேர் தினமும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கண் மருத்துவம், தோல் நோய் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் என 11 வகையான சிறப்பு மருத்துவ பிரிவுகளும் இதய நோய், சிறுநீரக நோய், தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட 15 உயர்ரக சிறப்பு மருத்துவ பிரிவுகளும் அமைக்கப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி ஆயுஷ் எனப்படும் இயற்கை மருத்துவ முறை, அவசர சிகிச்சை பிரிவும் செயல்பட உள்ளது. இத்துடன் எம்பிபிஎஸ் படிப்பில் 100 இடங்களும், பிஎஸ்சி நர்சிங் படிப்பில் 60 இடங்களும் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கலையரங்கம், இரவு தங்கும் வசதி, விடுதிகள் உள்ளிட்டவையும் செயல்பட உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hospital ,Madurai ,AIIMS , AIIMS Hospital, Prime Minister Modi, Central Government Information
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...