×

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் கல்வித்தகுதி இல்லாதவர்களை நியமித்தது எப்படி? : உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை : எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் கல்வித்தகுதி இல்லாதவர்களை நியமித்தது எப்படி என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்பிணிப் பெண்ணிற்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த பெண்ணிற்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் ஒரு கர்பிணிப் பெண்ணிற்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முறையாக செயல்படாத ரத்த வங்கிகளை மூட வேண்டும், குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள ரத்த வங்கிகளில் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை பணியமர்த்தியுள்ளனர் என கூறியுள்ளார். மேலும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தார். அந்த அறிக்கையில் 2014 மார்ச் முதல் 2016ம் ஆண்டு டிசம்பர் வரையிலான 17 மாதங்களில் ரத்த தானம் பெறப்பட்ட ரத்தத்தை உரிய பரிசோதனை செய்யாமல் ஏற்றியதில் இந்தியாவில் 2236 பேருக்கு ஹெச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 361 பேரும், தமிழகத்தில் மட்டும் 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்துள்ளதால் மட்டுமே இந்த கவனக்குறைவு ஏற்பட்டு ஹெச்ஐவி தொற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தார். எனவே தமிழகத்தில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம், ரத்த வங்கிகளில் உரிய கல்வித்தகுதி உடையவர்களை நியமனம் செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் கல்வித்தகுதி இல்லாதவர்களை நியமித்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய அரசு மூத்த வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : academics ,AIDS control center ,High Court , AIDS Control Center, Education, High Courts Branch, HIV Blood
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...