×

முசிறியில் குடிநீருக்கு திண்டாடும் மக்கள் : உள்ளூரில் காவிரி ஆறு இருந்தும் தண்ணீருக்கு தவம் கிடக்கும் அவலம்

தா.பேட்டை:  முசிறி நகர மக்களுக்கு உள்ளூரில் காவிரி ஆறு இருந்தும் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது.  ரூ.21.07 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளுக்கு வனஇலாகா முட்டுக்கட்டையால் பணிகள் பாதியில் முடங்கி கிடக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறியில் காவிரிஆறு இருந்தும் முசிறி பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்கு தினசரி குடிநீர் கிடைப்பதில்லை. அவ்வப்போது விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரும் மக்களுக்கு போதுமானதாக இல்லை. காவிரி ஆற்றிலிருந்து செயல்படுத்தப்படும் காவிரிகூட்டு குடிநீர் திட்டத்தினால் துறையூர், தா.பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீர் மிகுதியாக வரும் போதும், ஆறு வறண்டு இருக்கும் போதும் பெரிதும் பாதிக்கப்படுவது முசிறி நகர மக்களாகத்தான் இருக்கும்.

ஏனென்றால் ஆற்றில் தண்ணீர் மிகுதியாக வரும்போது ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் குழாய் அமைப்புகள் மின்சாரம் ஆகியவை சேதமடையும். இதனால் முசிறி மக்களுக்கு குடிநீர் வழங்க இயலாது. வறட்சியான காலத்தில் போர்வெல்லில் போதிய தண்ணீர் இருக்காது. அதனால் முழுமையான குடிநீர் வழங்க இயலாது. முசிறி நகர பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் சுகாதாரமான தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என 20102011 தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். 2015ல் இதற்கான அறிவிப்பு வெளியானது. 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடைசியாக அரசு விழாவில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் முசிறி அடுத்த வெள்ளூர் சத்திரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து ரூ.21.07 கோடி மதிப்பில் செயல்படுத்துவதற்கான குடிநீர் திட்டப் பணிகளில் இதுவும் ஒன்று.

அதனைத் தொடர்ந்து குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுவதும், ஏதேனும் காரணங்களால் நிறுத்தி வைக்கப்படுவதும், பின்னர் தொடருவதுமாக இருந்தது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் முசிறி வரை குழாய்களும் பதிக்கப்பட்டது. இதில் வெள்ளூர் சத்திரம் அருகே ஓர் இடத்தில் வனப்பகுதி வருவதால் அப்பகுதியில் குடிநீர் குழாய் அமைத்திட வன இலாகா ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் குழாய் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. முசிறி பேரூராட்சி நிர்வாகமும், முசிறி எம்எல்ஏவும் வன இலாகாவின் முட்டுகட்டையை நகர்த்தி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற படாதபாடுபட்டு வருகின்றனர்.

எனவே திருச்சி கலெக்டர் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்னைகளை அகற்றும் வகையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று முசிறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்கிட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாகும். தற்போது 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது. முசிறி அருகே உள்ள வெள்ளூர் சத்திரத்திலிருந்து செயல்படுத்தப்பட உள்ள முசிறி காவிரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினால் பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்கு தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்க முடியும் என அதிகாரிகள் உறுதிபட கூறுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mussoorie ,river ,Cauvery River , Musiri, drinking water, people, Cauvery River
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு