×

கருணாநிதி சாதனைகள் என்றைக்கும் நிலைத்திருக்கும்: இபிஎஸ். ஓபிஎஸ் புகழாரம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த சாதனைகள் என்றைக்கும் இந்த  மண்ணிலே நிலைத்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பாராட்டி பேசினார். இரங்கல் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 1937ல் அரசு பள்ளிகளில் இந்தி படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதனைக் கண்டித்து, நீதிக்கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. 13 வயதிலேயே இந்த போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். 1957ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்குள் நுழைந்த கலைஞர், 13 முறை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும், ஒரு முறை சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.1967ல் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானபோது அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக றுப்பு வகித்து திறம்பட பணியாற்றியவர். கலைஞர் 1969ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.  ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அரசியல் மட்டுமன்றி, தமிழ் இலக்கியம், தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என எல்லா இலக்கிய தளங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.  `பழனியப்பன்’ என்ற நாடகமே கலைஞர் முதன்முதலில் எழுதிய நாடகமாகும். திருவாரூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தார்.

 திருக்குறளை ஆய்ந்து எளிய நடையில் எழுதிய `குறளோவியம்’, கலைஞரின் முக்கிய இலக்கிய படைப்பாகும். `நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை ஆறு தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார்.   தமிழ்நாட்டு அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர். கலைஞர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றி இருக்கிறார்.  ஜெயலலிதாவும், அதேபோல நம்முடைய எதிர்க்கட்சி தலைவரும், நானும் 1989ம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இம்மாமன்றத்தில் காலடி எடுத்து வைத்தபோது கலைஞர் முதலமைச்சராக இருந்தார்.
அப்போது நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம் உரையாற்றியபோது, “சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக இங்கே அறிவித்து இருக்கிறார்கள். இது ஒரு அரை லட்சியம் தான். ஆனால் நம்முடைய லட்சியம் லட்சம். இந்த லட்சத்தை வருகின்ற சட்டமன்ற கூட்டத்திலேயே லட்சியமாக அறிவிப்பதற்கும், இன்னும் பல கோரிக்கைகளை செய்வதற்கும் நம்முடைய முதல்வர் காத்திருக்கிறார்கள்” என்று சொன்னார்.

உடன் பதில் அளித்த அன்றைய முதலமைச்சர் கலைஞர், “என்னுடைய லட்சியம் உறுப்பினர் சிங்காரம் நீண்ட காலம், பல ஆண்டு காலம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும் என்பது தான்” என்று சொன்னார். கோரிக்கையை அப்போது ஏற்கவில்லை என்றாலும் கோரிக்கை வைத்தவர் மனம் மகிழ்கிற வகையில், பதில் சொல்கிற வல்லமை பெற்றவர் கலைஞர்.இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு முதல் தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களையும் கண்ட பெருமை அவருக்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, ஒருவர் பிறக்கிறார், வாழ்கின்றார், மறைகின்றார். அந்த இடைப்பட்ட காலத்திலே செய்த சாதனை என்றைக்கும் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.ஓபிஎஸ்: தீர்மானத்தை முன்மொழிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கலைஞரின் சிறப்பான குணநலன்கள் குறித்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில்  பார்த்து பாராட்டலாம். அவரது ஓயாத உழைப்பையும், அந்த உழைப்பின் பயனாய் அவர்  பெற்ற உயர்வையும் எண்ணி வியக்கிறோம்.

தந்தை  பெரியாரின் சீடராக “குடி அரசு” இதழில் பணியாற்றி, திராவிடர் கழகத்தின்  எழுத்தாளராக, பகுத்தறிவுப் பேச்சாளராக தமிழகம் முழுதும் உலா வந்தவர். பேரறிஞர்  அண்ணா மீது அளவில்லா அன்பும், மரியாதையும் கொண்டு, அண்ணாவின் அன்புத்  தம்பியாக பாசம் காட்டியவர். அண்ணாவின் ஆற்றல் மிகு தொண்டனாக பரிமளித்தவர்.
எம்.ஜி.ஆரையும்  மு.கருணாநிதியையும், அண்ணா, அன்புத் தம்பிகள் என்றே குறிப்பிடுவார்.    அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கலைஞர் மு.கருணாநிதி திமுக தலைவராகவும்,  தமிழகத்தின் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முக்கியப்  பங்காற்றியவர் எம்.ஜி.ஆர்.  கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது  நான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இப்பேரவையில் பணியாற்றியிருக்கிறேன்.  சுதந்திர தினத்தன்று  மாநில முதல்வர்கள்  தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் மு.கருணாநிதி  தான். இவ்வாறு அவர் பேசினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா அன்பு
எம்.ஜி.ஆரும்.,  கலைஞர் மு.கருணாநிதியும் அரசியலைக் கடந்து சிறந்த  நண்பர்களாக  திகழ்ந்தனர்.கலைஞர் மு.கருணாநிதியிடம், அரசியல் ரீதியாக  எம்ஜிஆருக்கும்,  ெஜயலலிதாவுக்கும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,  இரண்டு தலைவர்களுமே  கலைஞர் மு.கருணாநிதி மீது மிகுந்த அன்பு  கொண்டிருந்தனர் என்று ஓ.பி.எஸ்.  கூறினார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karunanidhi , Karunanidhi,achievements ,remain forever, EPS.,Obs praise
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...