×

வருமானத்தை குறைத்து பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் உள்ளிட்ட 4 நிறுவனங்களின் 32 இடங்களில் ஐடி ரெய்டு: கையில் முக்கிய ஆவணங்களை வைத்து உரிமையாளர்களிடம் விசாரணை

சென்னை: வருமானத்தை குறைத்து பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் உள்ளிட்ட 4  நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.  மத்திய அரசு ₹1000 மற்றும் ₹500 நோட்டுகளை மதிப்பிழப்பு ெசய்த பிறகு வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தியது. இதில் உணவு விடுதிகள் முக்கிய பங்கு வகித்தன. முதலில் ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி அதிகளவாக 18 சதவீதம் விதிக்கப்பட்டது.பிறகு பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் மத்திய அரசு ஓட்டல்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி பாதியாக குறைக்கப்பட்டது.  சில ஓட்டல்கள் பழைய ஜிஎஸ்டி வரி விதிப்பின்படி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஆண்டு இறுதியில் முக்கிய ஓட்டல்களில் அதிகளவில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை ெசய்யப்பட்டது. ஆனால், ஓட்டல்களில் வரும் வருமானத்தை குறைத்து வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.அந்த வகையில், ெசன்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் வருமானத்தை குறைத்து போலி கணக்குகள் மூலம் பல கோடி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு ெசய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நிறுவனங்களில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக, அடையாறை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் நிறுவனத்தின் தலைமை அலுவலகங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அதேபோல், தி.நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அஞ்சப்பர் மற்றும் கே.கே.நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மற்றொரு நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையால் 4 நிறுவனத்தின் தலைமை அலுவலகங்கள் மூடப்பட்டன.நேற்று நள்ளிரவு வரை நடந்த சோதனையில் தமிழகம் முழுவதும் உள்ள 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் இருந்து வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஆண்டு வருமானத்தை குறைத்து மத்திய அரசுக்கு வருமான வரி தாக்கல் செய்துள்ளதற்கான ஆவணங்களும் கணினியில் இருந்து கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருமான வரி சோதனை நடைபெறும் ஓட்டல்களில் பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல், ஓட்டல் மேலாளர்கள், தலைமை மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் உட்பட யாரையும் வெளியே விடாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.  இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட  ஆவணங்களை வைத்து ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை, அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்க வேண்டும் என்பதால் இன்றும் தொடரும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பிரபல ஓட்டல் நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : places ,companies , 32 places,4 companies including Grade Sweets, Hot Breeds,Hot Breath, IT Reed,Investigations to Owners with Important Documents
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!