பிளாஸ்டிக் பிரச்னையில் தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுகிறது: திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  உதவும் வகையில் உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த  பேட்டி:கஜா புயலால் பாதிக்கப்பட்டு, அந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட திருவாரூர்  தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தேர்தலை நிறுத்த மத்திய அரசு, தேர்தல்  ஆணையத்திடம் முறையிட வேண்டும்.கஜா  புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர கால அவகாசம் அளிக்க வேண்டும். இப்போதுதான், மத்திய அரசு ₹1140  கோடி நிவாரணத்தை அறிவித்துள்ளது. இந்த நேரத்தில், அந்த நிவாரண பணிகள் செய்வதற்கு கால அவகாசம்  இல்லாதபடி தேர்தல் அறிவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க கோரி, டெல்லியில் நடக்கும் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை  சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கிறது. எனவே அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நான் டெல்லி செல்கிறேன்.மேகதாது அணை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டம் நடத்திய அதிமுக எம்பிக்கள் மீது,  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய  வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கை மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவிடும்  வகையில் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்க வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக  அரசு இப்படி செய்திருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு  இருப்பதாக தெரிகிறது. ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால் மகிழ்ச்சி. ஆனால், மறு சுழற்சி  செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் தடை விதித்து இருப்பது ஓர வஞ்சனையாகும். எனவே தமிழக  அரசு இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை அழிப்பதாக வைகோ குற்றச்சாட்டு