×

சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் கேரள கெஸ்ட் ஹவுஸ் மீது தாக்குதல் இந்து அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது: தலைமறைவான 10 பேருக்கு வலை

சென்னை: சென்னையில் உள்ள கேரள அரசு விருந்தினர் மாளிகை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய இந்து  அமைப்புகளை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது ெசய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 10 பேரை தேடி  வருகின்றனர்.சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த செப்டம்பர் 28ம் தேதி உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், சாலை  மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன.இந்நிலையில், கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் ேநற்று முன்தினம் அதிகாலை சபரிமலை வந்து, ஐயப்பனை தரிசனம்  செய்தனர். இந்த விவகாரம் பக்தர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஐயப்பன் கோயில்  தேவஸ்தானம் சார்பில் நடை சாத்தப்பட்டது. பெண்கள் வழிபாடு செய்ததால் கேரளா மற்றும் தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு  தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் கேரள  அரசுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் 15 பேர் கொண்ட மர்ம  கும்பல், கேரள அரசுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுசுக்குள் மின்னல் வேகத்தில் புகுந்தது.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கட்டிடத்தின் மீது கற்கள் வீசியும், கண்ணாடிகளை அடித்தும்  நொறுக்கியது. பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த தனியார் பாதுகாப்பு காவலர்கள் செய்வதறியாது  திகைத்தனர். சற்று நேரத்தில் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆயிரம் விளக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும், கெஸ்ட் ஹவுசில்  அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை  ஆய்வு செய்தனர். 15 பேரின் புகைப்படங்களை பெற்று விசாரணை  நடத்தினர்.அப்போது, இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.  அதை தொடர்ந்து குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இந்து முன்னணியை சேர்ந்த புளியந்தோப்பு தங்கராஜ் (34), எழும்பூர் பகுதி கார்த்திக் (24), பார்த்தசாரதி (42),  நிதிஷ்குமார் (18), டி.பி.சத்திரம் கிருஷ்ணா (27), நம்மாழ்வார்பேட்டை மீனாட்சி சுந்தர் (27) ஆகிய 6 பேரை அதிரடியாக  போலீசார் கைது ெசய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கேரள நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
கேரள அரசு விருந்தினர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள கேரள  அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், கட்டிடங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், கேரள மாநிலத்தை  சேர்ந்தவர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களுக்கும் போலீஸ் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,attack ,guest house ,Sabarimala ,Kerala , Women,Sabarimala's,Kerala guest,6 Hindu , arrested
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...