×

199வது முறையாக களம் இறங்கினார்: வெற்றியே வேண்டாம் உயிருள்ளவரை போட்டியிடுவேன்: கடைசி மோதிரத்தையும் அடகுவைத்து டெபாசிட் தேர்தல் மன்னன் பத்மராஜன் பேட்டி

திருவாரூர்: தேர்தல் மன்னன் என புகழப்படும் மேட்டூர் பத்மராஜன் இன்று திருவாரூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  இது அவரது 199வது தேர்தல். கடைசியாக இருந்த ஒரு மோதிரத்தையும் அடகு வைத்து  டெபாசிட் செலுத்தியாக அவர்கூறினார்.மேட்டூரை சேர்ந்தவர் பத்மராஜன்(60), டயர் ரீ டிரேடிங் தொழில் செய்து வந்த பத்மராஜன் கடந்த சில வருடங்களாக அந்த தொழிலையும் விட்டு விட்டார்.  அந்த கடையை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தைக்கொண்டு ஜீவனம் செய்கிறார். இவரது மனைவி ஜா நம்பியார். மகன்  ஜேஸ் நம்பியார், எம்.பி.ஏ. எம்.பில் முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
தேர்தல் எங்கு நடந்தாலும் அங்கு சென்று போட்டியிடுவதால் பத்மராஜனை தேர்தல் மன்னன் என்று அழைக்கிறார்கள்.  இணையதளத்திலும் எலக்‌ஷன் கிங் என்று டைப் செய்தால் பத்மராஜன் பற்றிய தகவல்கள் கிடைக்கிறது. அந்த அளவுக்கு உலகம் முழுவதும் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியால் புகழப்படுகிறார்.

இவர்  நேற்று திருவாரூர் வந்து தங்கினார்.  அவர் சுயேச்சையாக போட்டியிடுவதால் நேற்று நண்பர் மூலம் 10 பேரை வேட்புமனு முன்மொழிவதற்கு ஏற்பாடு செய்தார். இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியதும் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் முருகதாசிடம் மனு தாக்கல் செய்ய வந்தார்.  அவர் வேட்புமனுவுடன் தேர்தல் அலுவலகத்திற்குள் சென்றார். முன்னதாக பத்மராஜன் தமிழ் முரசு நிருபரிடம் கூறியதாவது:
 நான் கடந்த 1988 முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இது எனது 199வது தேர்தல், ஜனாதிபதி தேர்தலில் 5 முறை, உதவி ஜனாதிபதி தேர்தலில் 5 முறை,  கருணாநிதி, ஜெயலலிதா,  மோடி என அனைத்து தலைவர்களை எதிர்த்தும் போட்டியிட்டு இருக்கிறேன்.  மயிலாப்பூர் தொகுதியில் தான் மிக குறைவாக  8 ஓட்டுகள் மட்டும் பெற்றேன். 2011ல் எனது சொந்த தொகுதியான மேட்டூரில் அதிகபட்சமாக 6,273 ஓட்டுகள் பெற்றேன்.
ஒவ்வொரு தேர்தலிலும் ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்டுகிறேன்.  அதை ஒருமுறை கூட திரும்ப வாங்கியதில்லை.

 எல்லா தேர்தலிலும்டெபாசிட் இழந்து வருகிறேன். ஆனாலும் உயிருள்ளவரை போட்டியிடுவேன். தற்போது எனது கடைசி மோதிரத்தை அடகு வைத்து பணம் கொண்டு வந்து இருக்கிறேன். அதை திருப்ப முடியுமா என்பதும் தெரியவில்லை. எனக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. தோல்வி தான் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. தேர்தலில் இப்படி பணத்தை வீணடிப்பதை என் மனைவி கண்டித்தும் நான் போட்டியிட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். என் குணத்தை மாற்ற முடியாது என கருதி, மனைவியும், மகனும் என்னை விட்டு விட்டனர். கடந்த 1997ம் ஆண்டு எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அப்போது எனது நண்பர் ஆஸ்பத்திரிக்கு வந்து தேர்தல் அறிவித்து விட்டார்கள் என கூறினார். அப்போது எந்த தேர்தலும் அறிவிக்காத நிலையிலும் அவர் என்னிடம் பொய்யாக கூறி உள்ளார். அதை உண்மை என நம்பிய எனது மனதுக்கு புது தெம்பு கிடைத்தது. ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து விட்டேன்.

அந்த அளவுக்கு தேர்தல் எனக்கு புது தெம்பு அளிக்கிறது.  இப்படி போட்டியிடுவதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டால் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. நான் சொல்லி யாரும் கேட்கவும் மாட்டார்கள். தேர்தலில் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இப்போது 199வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்ய செல்கிறேன். இது கலைஞரின் தொகுதி என்பதால் இங்கு போட்டியிடுவதை   எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.கலைஞரை எதிர்த்து  ஏற்கனவே நான் சேப்பாக்கத்தில் போட்டியிட்டேன். கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்தும், ஆண்டிப்பட்டி, பர்கூர், ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவை எதிர்த்தும் போட்டியிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Padmanarajan , Domain, Success, Ring, Deposit Election, King Padmarajan
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...