×

உயர்மின்கோபுர விவகாரம்: 13 மாவட்ட விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: விளைநிலங்களை வழியாக மின்கோபுரம் அமைப்பது குறித்து 13 மாவட்ட விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம்  கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு  தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில், மின்கோபுரம் அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்மின் கோபுரம் அமைத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று 13 மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற மாநிலங்களில் பூமிக்கடியில் கேபிள்  பதிக்கப்படுவதைப்போல் தமிழ்நாட்டிலும் பூமிக்கு அடியில் கேபிள் மூலமாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள்  அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

திருப்பூரில் 13 விவசாயிகளும் ஒன்று சேர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். விவசாயிகளின் போராட்டத்திற்கு வணிகர்களும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போரட்டம் நடத்தினர். இந்நிலையில், விவசாய  நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணியுடன் 13 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த  பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டபடாத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விவசாய பிரதிநிதிகள், உயர்மின்கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக இல்லாமல் வேறு வழியாக பூமிக்கடியில் மின்சாரம் கொண்டு செல்ல கேட்டுக்கொண்டோம்  ஆனால், இந்தியாவில் எங்கும் கேபிள் மூலம் கொண்டு செல்லும் திட்டம் இல்லை  என்றும் பூமிக்கடியில் மின்கேபிள் அமைக்க 10 மடங்கு செலவு ஆகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார் என்றும் உயர்மின் அழுத்த  கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த மறுப்பு தெரிவித்ததாகவும் கூறினர். அமைச்சர் தங்கமணி நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை, விவசாயிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை  குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். முன்னதாக இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் திட்டம் குறித்து விரிவாக தகவல் அளிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Commission ,Dougamani ,Negotiations ,District representatives , High Commission, Agriculture Representatives, Minister Doughamani, Negotiation, Failure
× RELATED சென்னை விமான நிலையம் முதல்...