×

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பெருமாள் சிலை இன்று திருவண்ணாமலை செல்கிறது

செஞ்சி: விழுப்புரம் மாவட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராட்சத பெருமாள் சிலை இன்று திருவண்ணாமலை செல்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நிறுவுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து 380 டன் எடையில், 62 அடி அகலம், 26 அடி நீளம் கொண்ட பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டது. கடந்த மாதம் 9ம்தேதி கார்கோ கன்டெய்னர் லாரியில் பலத்த பாதுகாப்புடன் பெருமாள் சிலை பெங்களூரு புறப்பட்டது. செஞ்சி, திருவண்ணாமலை வழியாக சுவாமி சிலை பெங்களூரு செல்ல இருந்தது. ஆனால் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டையின் மதில் சுவர்கள் லாரி செல்ல தடையாக இருந்தது.

எனவே, சிலையின் எடை குறைக்கப்பட்டது. இருப்பினும், கோட்டையின் பாதுகாப்பு கருதி அவ்வழியாக லாரி செல்ல தொல்லியல்துறை அனுமதி வழங்கவில்லை. எனவே, 9 நாட்களாக செஞ்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இடையூறுகள் அகற்றப்பட்டு, கடந்த 30ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுக்கு பெருமாள் சிலை வந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் காலை பெருமாள் சிலை புறப்பட்டது. விழுப்புரம் மாவட்ட எல்லையான சஞ்சீவிராயன்பேட்டை, மேல்செவளாம்பாடி, மேல்மலையனூர் வழியாக கப்ளாம்பாடி வந்தது.

அங்கிருந்து மேலும் செல்ல முடியாமல் இரண்டு மின் கம்பங்கள், 2 வீடுகள் இடையூறாக இருந்தன. மின் கம்பங்கள் அகற்றப்பட்டன. வீடுகளின் உரிமையாளர்கள் வெளியூர் சென்று விட்டதால் வீடுகளின் முன்பகுதியை இடிக்க முடிய வில்லை. இதனால் கப்ளாம்பாடி கிராமத்தில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டது.    இதனிடையே வெளியூர் சென்றிருந்த இரண்டு வீடுகளின் உரிமையாளர்கள் நேற்று காலை ஊருக்கு திரும்பினர். அவர்களிடம், சிலையை கொண்டு செல்லும் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய இழப்பீடு தருவதாக உறுதி அளித்தனர். இதனால் வீடுகளின் முன்பகுதியை இடிப்பதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதன் பின்னர் வீடுகளின் முன்பகுதி இடிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி முடிவடைந்ததும் பெருமாள் சிலை திருவண்ணாமலை புறப்பட்டு செல்லும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perumal ,Villupuram district ,Thiruvannamalai , Villupuram, Perumal idol, Thiruvannamalai
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்