×

1 மாதத்திற்கு பின் மணப்பாறை மாட்டுச்சந்தை திறப்பு : உள்ளூர் மாடுகளே வந்ததால் வெறிச்சோடியது

மணப்பாறை: மணப்பாறை மாட்டுச்சந்தை 4 வாரத்திற்கு பின் நேற்று திறக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் குறைவான மாடுகளே கொண்டு வரப்பட்டதால் மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தாயனூர், சமயபுரம், தொட்டியம், ஏழூர்பட்டியில் கால்நடை சந்தைகள் வாரந்தோறும் நடைபெறும். இந்த சந்தைகளுக்கு பிற மாவட்டங்களிலிருந்து வரும் கால்நடைகள் மூலம் திருச்சி மாவட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளை மூட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 4 வாரங்களாக மணப்பாறை, தாயனூர், சமயபுரம், தொட்டியம், ஏழூர்பட்டி ஆகிய கால்நடை சந்தைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கோமாரி நோய் கட்டுப்பாட்டில் உள்ளதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளை மீண்டும் நேற்று (புதன்கிழமை) முதல் செயல்பட அனுமதி அளித்து திருச்சி கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். மணப்பாறை மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும். இதனால் செவ்வாய்கிழமை மதியமே மாட்டு வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளுடன் குவிவார்கள். பல லட்சம் விற்பனை நடக்கும்.

கலெக்டரின் திடீர் உத்தரவால் மணப்பாறை மாட்டு சந்தை நேற்று திறக்கப்பட்ட தகவல் வெளியூர் வியாபாரிகளுக்கு தெரியாமல்போனது. இதனால் மணப்பாறை மாட்டு சந்தைக்கு உள்ளூர் வியாபாரிகள், விவசாயிகள் மட்டுமே வந்தனர். ஆயிரம் மாடுகள், ஆடுகள் வரும் நிலையில் நேற்று நூற்றுக்கும் குறைவான மாடுகளே கொண்டுவரப்பட்டதால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் கால்நடை விற்பனை மீண்டும் சூடுபிடிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : opening ,chapel , manaparai,cow market,cow
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு