×

முற்றிலும் செயலிழந்த அரசின் அறிக்கை பேரவையில் கவர்னர் உரை தாக்கல் செய்வது வெட்கக்கேடான செயல்: வெளிநடப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

அரசு சார்பில் தயாரித்திருக்கக்கூடிய கவர்னர் உரையை பேரவையில் தாக்கல் செய்வது வெட்கக்கேடான செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.  தமிழக சட்டப் பேரைவையில் நேற்று கவர்னர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் அவைக்கு வெளியில் திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம்  கூறியதாவது:  ‘டோட்டலி பெயிலியர் கவர்மென்ட்’ (முற்றிலும் செயல் இழந்த அரசு) நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கஜா புயல் உதவித் தொகையாக இந்த அரசு மத்திய அரசிடம் கேட்டத்தொகை 15,000 கோடி ரூபாய்.  ஆனால், இதுவரையில் 1,500 கோடி ரூபாய் வரையில் கூட இந்த மத்திய அரசு  வழங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு போட்டதாக இந்த எடுபிடி அரசு சொல்லுகின்றது. ஆனால், அதனைத் திறக்கச் சொல்லி  பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவு போட்டிருக்கின்றது.  அதேபோல், மேகதாது அணை பிரச்னையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு கொடுத்திருக்கும் அனுமதியைக் கூட திரும்பப் பெற வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் தர முடியாத நிலையில் இந்த கேடு  கெட்ட அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்றது.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தைச் செலுத்தி ஒரு மோசமான சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கின்றது. அதேபோல், விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை  எதிர்த்து அந்தப் பகுதி விவசாயப் பெருமக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை அழைத்து இந்த அரசு பேசுவதற்குக் கூட வக்கற்ற, வகையற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.  குட்கா புகழ்  விஜயபாஸ்கருக்கு பல நெருக்கடிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே, அவருடைய கம்பெனி, அலுவலகத்தில், வீட்டில் ரெய்டுகள் நடந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, வருமான வரித்துறை அவரை அழைத்து விசாரணை நடத்தியிருக்கின்றது. இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர், ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து இந்தப் பதவியில்  ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கக் கேடான செயலாகும். அதேபோல், முதல்வராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீதெல்லாம் நீதிமன்றத்திலே ஊழல் வழக்குகள் தொடர்ந்து போடப்பட்டு கொண்டிருக்கின்றது. அனைத்துக்கும்  மேலாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இறப்பில் மிகப்பெரிய மர்மம் இருக்கிறதென்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  பகிரங்கமாக, ஆக்ரோஷமாக, ஆத்திரமாக, ஆவேசமாக பத்திரிகையாளரிடத்தில் பேட்டி  தந்திருக்கின்றார்.

 இதனால் தான் நாங்கள் அவர் இறந்தவுடனே இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வைக்க வேண்டும் என்று திமுக சார்பில் அப்பொழுதே எடுத்துச் சொன்னோம். எனவே, அதைத்தொடர்ந்து இப்பொழுதும் வலியுறுத்திக்  கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கக்கூடிய ஆளுநர் உரை இன்று(நேற்று) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல். எனவே, அரசு எழுதித் தந்திருக்கக்கூடிய ‘பெயிலியர் பேப்பர்களை’ ஆளுநர் இப்பொழுது சட்டமன்றத்தில் படித்துக் கொண்டிருக்கின்றார். எனவே, அதை நாங்கள் கண்டித்து அவருடைய உரையை புறக்கணித்து திமுக சார்பில்  வெளிநடப்பு செய்திருக்கின்றோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : submission ,governor ,Board of Governors ,walkout ,MKStall ,act , Totally, statement, Governor , MK Stalin ,walkout
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து