×

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி பொதுநல வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது. திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி அந்த தொகுதிக்கான இடம் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, வரும் 28ம் தேதி திருவாரூர்  தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதற்கான அறிவிப்பாணை வெளியிட உள்ள நிலையில், தேர்தல் நடத்த தடை விதிக்கக்கோரி வக்கீல் என்ஜிஆர் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய  டிவிஷன் பெஞ்சில் நேற்று முறையிட்டார்.அவர் கூறும்போது, ‘கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் குறிப்பாக திருவாரூர் தொகுதியில் நிவாரணப் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மேலும், இந்த மாதம்  பொங்கல் பண்டிகை காலம் என்பதால் ஜனவரி 28ம் தேதி  தேர்தல் நடத்தினால் நிவாரண பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். அன்பளிப்பு என்ற பெயரில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பல்வேறு பொருட்களைத் தர வாய்ப்பு  ஏற்படும். இதனால், தேர்தல் நேர்மையாக நடைபெறாது. எனவே, இடைத்தேர்தல் தொடர்பாக நாளை (இன்று) அறிவிப்பாணை வெளியிட தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக தாக்கல் செய்யும் மனுவை அவசர வழக்காக  விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கோரினார்.

அவரது முறையீட்டை கேட்ட நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க முடியாது. மனுத் தாக்கல் செய்யும்பட்சத்தில் வழக்கமான நடைமுறையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றனர். மேலும், இயற்கை சீற்றங்கள்  என்பது எதிர்பாராமல் வருவதுதான். அவற்றை கருத்தில் கொண்டுதான் அரசியலமைப்புகள் செயல்படுகின்றன. அதே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தடைவிதிப்பது சாத்தியமில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இதையடுத்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சத்தியநாராயணன் என்பவர் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்குமாறு மனுத்தாக்கல் செய்தார்.இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி, தலைமை நீதிபதி தாஹில் ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் வக்கீல்கள் முறையிட்டனர். இந்த முறையீட்டை கேட்ட  நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்யப்பட்டு மனுவுக்கு  எண்ணிடும் நடைமுறை முடிந்துவிட்டதா என்று கேட்டனர். மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு எண் பதிவு செய்யப்படவில்லை என்று வக்கீல்கள்  தெரிவித்தனர்.இதையடுத்து, இந்த வழக்கை எந்த டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் என்று மதியம் தெரிவிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.வழக்கு மதியம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வக்கீலிடம், தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகளை நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வே விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி  அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தெரிவித்தது. அதன்படி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tribunals ,trial ,Tiruvarur ,high court , Tiruvarur, Court ,banned today
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...