×

தொடர்ந்து 6வது ஆண்டாக சபரிமலையில் தரிசனம் செக் குடியரசை சேர்ந்த 42 பக்தர்கள் குமரி வருகை

கன்னியாகுமரி: சபரிமலைக்கு செல்ல விரதம் மேற்கொண்டுள்ள செக் குடியரசை சேர்ந்த 42 ஐயப்ப பக்தர்கள் நேற்று கன்னியாகுமரி வந்தனர். தொடர்ந்து 6வது ஆண்டாக சபரிமலை செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.  செக் குடியரசை சேர்ந்தவர் தாமஸ் பீட்டர். இவரது தலைமையில் அந்நாட்டைச் சேர்ந்த 62 பேர் கடந்த 26ம் தேதி தமிழகம் வந்தனர். ராமேஸ்வரம், திருவண்ணாமலை சென்ற இவர்கள் நேற்று காலை கன்னியாகுமரி வந்தனர். இவர்களில் 42 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்துள்ளனர். கருப்புநிற ஆடையுடன், கழுத்தில் ஐயப்பன் படத்துடன் கூடிய ருத்ராட்ச மாலை அணிந்துள்ள இவர்கள் நெற்றியில் குங்குமத்துடன் கன்னியாகுமரியை வலம் வந்தனர். இதுகுறித்து குழுவை சேர்ந்த மெர்லேஸ் (54) கூறுகையில், நாங்கள் தொடர்ந்து 6 வது ஆண்டாக சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளோம்.

ஐயப்ப பக்தர்களைப் போன்று விரதமிருந்து இருமுடி கட்டியே கோயிலுக்குச் செல்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து குற்றாலம் செல்லும் நாங்கள் ராஜபாளையம் பகுதியில் இருமுடி கட்டி வரும் 7ம் தேதி சாமி தரிசனம் செய்ய உள்ளோம். ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ள எங்கள் குழுவில் 20 பெண்களும், 22 ஆண்களும் இடம் பெற்றுள்ளனர். அனைவருமே 50 வயதைத் தாண்டியவர்கள். அங்கு கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளை மதிக்கும் நாங்கள் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கோயிலுக்குச் சென்று நாடு திரும்புவோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : darshan ,pilgrims ,Sabarimala ,visit ,Czech Republic ,Kumari , Sabarimala, devotees, Czech Republic, Kumari
× RELATED ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு