×

ரபேல் விவகாரத்தில் பிரதமரை பிளாக்மெயில் செய்கிறார் பாரிக்கர்: ராகுல் சரமாரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பிளாக் மெயில் செய்கிறார்’’ என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ரபேல் விவகாரம் பற்றி மக்களவையில் நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ராகுல் ஒன்றரை மணி நேரம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முழு ஆவணங்களும் தனது படுக்கை அறையில்  இருப்பதாக அமைச்சரவை கூட்டத்தில் கோவா முதல்வரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான மனோகர் பாரிக்கர் தெரிவித்ததாக கோவா அமைச்சர் ரானே கூறுவது ஆடியோவில் தெளிவாக கேட்கிறது. இந்த ஆடியோ ஆதாரம் உண்மையானது. இதுபோல் இன்னும் பல ஆதாரங்கள் இருக்கலாம். அந்த ஆவணத்தில் என்ன தகவல் உள்ளது? இது எந்த விதத்தில் பிரதமர் மோடியை பாதிக்கும்? ரபேல் விமானத்தின் விலையை ரூ.526 கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக உயர்த்தியது யார்? இந்த விஷயத்தில் பிரதமர் மோடியை, பாரிக்கர் பிளாக்மெயில் செய்கிறார். இதுதான் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடாததற்கு காரணம் என்றால், இது குறித்து நாட்டு மக்கள் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.

ரபேல் ஒப்பந்தம் ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம் என நிதியமைச்சர் அருண் ஜெட்லியே கூறியுள்ளார். 36 விமானங்கள் ரூ.58 ஆயிரம் கோடி என்றால், ஒரு விமானத்தின் விலை ரூ.1,600 கோடி. இது நாங்கள் கூறும் கணக்கு அல்ல. அரசு கூறும் கணக்கு. அனைத்து விவரங்களும் தனது படுக்கை அறையில் உள்ளதாக பாரிக்கர் கூறுகிறார். உண்மையை மறைக்க முடியாது. உண்மையை நீங்கள் மறைக்க முயன்றால், அது மேலும், மேலும் வெளிவரும். இந்த ஒப்பந்தத்தை முடிக்க பிரான்ஸ் சென்றவர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. நிதியமைச்சர் பதில் அளிக்கிறார்.  காவலாளி திருடனாக இருக்கிறார். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே, இந்த  முறைகேட்டில் ஈடுபட்டது அனில் அம்பானியா? நரேந்திர மோடியா? என்பதை தெரிவிக்கும்.

எனக்கு பிரமருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய 20 நிமிடம் தாருங்கள். பிறகு நடந்தது என்ன? என நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்கு பிரதமருக்கு தைரியம் இல்லை. உங்கள் முன் உட்கார்த்து பேச அவருக்கு தைரியம் இல்லை. ரபேல் விவகாரத்தில் தனக்கு எதிராக எந்த கேள்வியும் இல்லை என நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறுகிறார். அவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என தெரியவில்லை. ரூ.30 ஆயிரம் கோடியை அனில் அம்பானிக்கு நீங்கள் ஏன் கொடுத்தீர்கள்? என்றுதான் உங்களிடம் மக்கள் கேட்கின்றனர். ரபேல் ஒப்பந்தம் பற்றி யாரையோ கேள்வி கேட்கின்றனர் என பிரதமர் நினைத்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார். நேருக்கு நேர் விவாதம் செய்ய பிரதமருக்கு தைரியம் இல்லை. உங்கள் முன் உட்கார்த்து பேச அவருக்கு தைரியம் இல்லை.

கோவா முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த வேண்டும்
கோவா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சிததார்த் பய்யா கூறுகையில், ‘‘இந்த ஆடியோவில் வெளியான தகவல் உண்மையானதா என அறிய பாரிக்கரின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட வேண்டும். அமைச்சர் ரானே யாருடன் பேசுகிறார் என்ற நபரை கண்டறிந்தும் அவருக்கும், பாரிக்கருக்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இல்லை என்றால், அவர்களுக்கு குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் கடந்த 2003ம் ஆண்டு கொல்லப்பட்டது. சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் நீதிபதி லோயா கடந்த 2014ம் ஆண்டு மர்மமாக இறந்தது போன்ற நிலைதான் ஏற்படும். பாரிக்கர், ரானே, மற்றும் இதர கேபினட் அமைச்சர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parrikar ,Rahul Saramari ,Rafael , Rafael, Prime Minister, Blackmail, Parikar, Rahul
× RELATED ஸ்பெயினில் முதலமைச்சர்...