×

ரபேல் குறித்து மக்களவையில் ராகுல் - ஜெட்லி காரசார விவாதம்

பதில் சொல்ல தைரியமின்றி மோடி ஒளிந்து கொள்கிறாரா?

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது. அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘‘விமானத்தின் விலை அதிகரிக்க என்ன காரணம்? அம்பானி நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்த்தது ஏன்? விமானத்தின் எண்ணிக்கையை குறைத்தது யார்?’ என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். மேலும், ரபேல் குறித்து நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல தைரியமில்லாமல் பிரதமர் மோடி அறையில் ஒளிந்து கொள்வதாகவும் ராகுல் பொறிந்து தள்ளினார். இதற்கு அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார். புத்தாண்டு விடுமுறை முடிந்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், இவ்விவகாரம் தொடர்பாக மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:ரபேல் ஒப்பந்தத்தில் பல்வேறு ஓட்டைகள் உள்ளன. பிரதமர் மோடி புத்தாண்டு தினத்தில் அளித்த பேட்டியில், ரபேல் விவகாரத்தில் தன்மீது தனிப்பட்ட முறையில் யாரும் குற்றம் சாட்டவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாடே அவரிடம்தான் நேரடியாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த முறை நாடாளுமன்றத்தில் அவர் ரபேல் விவாதத்தின் போது நீண்ட நேரம் பேசினார். ஆனால், அப்போது கூட ரபேல் பற்றி 5 நிமிடம் கூட பேசவில்லை. நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்ல அவருக்கு தைரியமில்லை. தனது அறையிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இங்கிருக்கும் பாதுகாப்பு துறை அமைச்சரோ, அமளியில் ஈடுபடும் அதிமுக எம்பி.களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழுவுக்கு எந்த விவரமும் தெரியவில்லை. ரபேல் விவாதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாஜ.வை காப்பதற்காக அதிமுக எம்பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரபேல் ஒப்பந்தத்தின் பின்னால் 8 ஆண்டு கடின உழைப்பு உள்ளது. 126 விமானங்கள் வேண்டுமென்ற பழைய ஒப்பந்தத்தை நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள். அது ஏன்? 36 விமானங்கள் போதும் என விமானப்படை கூறியதா? அல்லது தன்னிச்சையாக பிரதமர் மோடியே மாற்றினாரா? பிரதமர் மோடி பிரான்ஸ் சென்ற போதுதான், விமானத்தின் விலை ரூ.526 கோடியில் இருந்து ரூ.1,600 கோடியாக அதிகரித்தது. ஏன் விலை அதிகரித்தது? விமான தயாரிப்பில் 70 ஆண்டு காலம் அனுபவம் வாய்ந்தது எச்ஏஎல் நிறுவனம். பல சிறந்த தயாரிப்புகளை உருவாக்கிய எச்ஏஎல் நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு, நண்பரும், நொடிந்து போன தொழிலதிபருமான ‘ஏஏ’வின் (அனில் அம்பானி) நிறுவனத்தை சேர்த்தது ஏன்? ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 10 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘ஏஏ’வின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றது எப்படி? ஏன் இன்னும் ஒரு விமானம் கூட இந்தியாவிடம் தரப்படவில்லை?பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான புகார்கள் நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வராது என்றுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தவிர, நாடாளுமன்ற குழு விசாரணை தேவையில்லை என்று கூறவில்லை. பாஜ.வுக்கு எந்த பயமும் இல்லை என்றால் நாடாளுமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதுதானே? இவ்வாறு அவர் பேசினார்.

விமான ஒப்பந்தம் பற்றி ஒன்றும் தெரியாமல் பேசுகிறார்

ரபேல் பற்றி ராகுல் கேட்ட அனல் தெறிக்கும் கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி  பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது: இயற்கையிலேயே உண்மையை விரும்பாத சிலர் இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 6 மாதமாக அவர்கள் பேசும் ஒவ்வொரும் பேச்சும் பொய்யானது. பொய் பேசுவதே அவர்களின் மரபு. கடந்த ஆட்சியில் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஊழல் செய்தவர்கள், இப்போது மற்றவர்களை பார்த்து விரல் நீட்டுகிறார்கள். இந்த நேரத்தில், அகஸ்டா வெஸ்ட்லாண்ட், நேஷனல் ஹெரால்டு ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்பினால் பதிலளிக்க ராகுலுக்கு தைரியம் இருக்கிறதா? சில மனிதர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பணத்தின் மீது மட்டும்தான் கவனம் இருக்கும். தேச பாதுகாப்பில் அவர்களுக்கு அக்கறை கிடையாது.விமானத்தின் விலை தொடர்பான அனைத்து தகவல்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். இந்த ஒப்பந்தம் சரியான நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றமே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால்,  ராகுல் ஒப்புக்கொள்ள மறுத்து திரும்பத் திரும்ப பொய் பேசுகிறார். சிறு வயதில் சில ‘க்யூ’க்களின் (குட்ரோச்சி) மடியில் தவழ்ந்து வளர்ந்ததால்தான் அடைமொழிகளை ராகுல் பயன்படுத்தி பேசுகிறார். இந்த ஒப்பந்தத்தில் ஒத்துழைப்பு நிறுவனம் தேர்வு செய்யப்படும் நடைமுறை 2005ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டதுதான். அதைப் பற்றியோ, ரபேல் விமானத்தை பற்றியோ, அதன் அவசியத்தை பற்றியோ, ஒப்பந்தம் பற்றியோ எதுவுமே முழுமையாக அறியாதவர்தான் ராகுல்.

அப்படிப்பட்ட ஒருவர் மூத்த கட்சியின் தலைவராக இருப்பது நாட்டின் அவல நிலை.கார்கில் போரின் போது, 1.5 எம்எம் துப்பாக்கிகளை வைத்து நமது ராணுவம் சண்டையிட்டுள்ளது. ரபேல் மூலம் 150-200 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்க முடியும். 2001ம் ஆண்டே நமது ராணுவம் ரபேல் விமானத்தை கேட்டுள்ளது. ஆனால், அடுத்த 11 ஆண்டுகாலம் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். ரபேல் ஒப்பந்தம் பற்றி பிரதமர் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக ராகுல் கூறுகிறார். அதுவும் பொய். ரபேல் ஒப்பந்தத்திற்காக பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அமைக்கப்பட்டு, அக்குழு 74 முறை பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அதன்பிறகு அனைத்தும் முடிவான பிறகுதான் ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதை விட 9 சதவீதம் குறைவான விலைக்கே பாஜ ஆட்சியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.ரபேல் ஒப்பந்தம் ஒன்றும் அரசின் கொள்கை முடிவல்ல. இது வெளிப்படையானது. உச்ச நீதிமன்றமும் திருப்தி தெரிவித்துள்ளது. எனவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.இந்த விவாதத்தின் இடையே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மனோகர் பாரிக்கரின் படுக்கையறையில் ஆவணம் கோவா அமைச்சர் பேச்சு?
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள், விலை தொடர்பான முக்கிய குறிப்புகள் அனைத்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கரின் படுக்கை அறையில் இருப்பதாக கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே தொலைபேசியில் மற்றொரு நபரிடம் கூறுவது போன்ற ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோ பதிவை மக்களவையில் வெளியிட  சபாநாயகரின் அனுமதியை ராகுல் கோரினார். அதற்கு, பாஜ உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் ராகுலுக்கு அனுமதி அளிக்க மறுத்தார். இதற்கிடையே, ஆடியோவில் பேசியதாக கூறப்படும் கோவா அமைச்சர் ரானே, பனாஜியில் அளித்த பேட்டியில், ‘‘நான் அப்படி எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் நான் கூறியதை திரித்துக் கூறுகிறது’’ என குற்றம்சாட்டினார்.

இந்த பேட்டி வெளியான சிறிது நேரத்துக்குப் பிறகு மக்களவையில் பேசிய அருண் ஜெட்லி, ‘‘ரபேல் விமானம் பற்றி தான் எதுவும் பேசவில்லை என கோவா அமைச்சர் ரானே மறுத்துள்ளார். அதை வெளியிடுவதாக இருந்தால், அந்த ஆடியோவின் உண்மைத்தன்மைக்கு பொறுப்பேற்க ராகுல் தயாரா?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு, ராகுல் தயாராக இல்லை. இதைத் தொடர்ந்து, ‘‘இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற பதிவுகளை வெளியிட அனுமதிக்க முடியாது’’ என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்து விட்டார். இந்த ஆடியோ விவகாரம் கோவா அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது காங்கிரசின் சதி என பாஜ குற்றம்சாட்டி வருகிறது.

பாதுகாப்பு அமைச்சர் பேசுவதில்லை ஏன்?
அருண் ஜெட்லியை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் பேசுகையில், ‘‘நாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அப்படிப்பட்ட நிறுவனத்தை விட்டு, ரூ.45,000 கோடி கடனில் தவிக்கும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது, நாட்டு நலனை மீறியது கிடையாதா? புதிய நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்த்தது ஏன்? அதைப்பற்றி நிதியமைச்சர் விளக்கம் தரத் தவறி விட்டார். ஏன் பாதுகாப்பு அமைச்சர் இதைப் பற்றி பேசுவது கிடையாது?’’ என கேள்வி கேட்டார். அதேபோல், பிஜூ ஜனதா தள எம்பி காளிகேஷ் நாராயணன் சிங் தியோவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

ஜேம்ஸ் பாண்ட் வசனத்தை தவறாக சொல்லிய ஜெட்லி
ராகுல் பற்றி அருண் ஜெட்லி பேசுகையில், ஹாலிவுட் படத்தின் ஜேம்ஸ்பாண்ட் பட வசனத்தை எடுத்துக்காட்டாக கூறினார். அவர் கூறுகையில், ‘‘பாண்ட் சொல்வார்: ஒரு சம்பவம் முதல் முறையாக நடந்தால் அது தற்செயலானது. 2வது முறையும் நடந்தால், அது ஒத்த நிகழ்வு. 3வது முறையும் நிகழ்ந்தால், அது சதி என்பார். ராகுலும் அதைத்தான் செய்கிறார்’’ என்றார். பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ராய் பேசுகையில் ஜெட்லியை பார்த்து, ‘‘ஞாபக சக்தி உங்களை ஏமாற்றி விட்டது. 3வது முறையும் ஒரு சம்பவம் நடந்தால் அது சதி அல்ல, எதிரியின் செயல் என்பதுதான் சரியான டயலாக்’’ என்று திருத்தினார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul-Jetley ,Rafael ,Lok Sabha , Lok Sabha, Rafael, Rahul, Jetly
× RELATED குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை...