×

குமரி டாஸ்மாக் பார்களில் கண்ணாடி டம்ளர்களுக்கு 10 வாடகை வசூலிப்பு: ‘குடி’மகன்கள் கடும் அதிர்ச்சி

மார்த்தாண்டம்: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தடைவிதித்து கடந்த ஜூன் 5ம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவு ேநற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பூசப்பட்ட பேப்பர் கப்புகள், தட்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் பார்களில் தற்போது கண்ணாடி டம்ளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள பார்களில் இது பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை நீங்கள் வீட்டிற்கு கொண்டுவர முடியாது. இதற்கு வாடகை வசூலக்கப்படுகிறது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பார்களில் நேற்று கண்ணாடி டம்ளருக்கு ரூ.7 வாடகை வசூலிக்கப்பட்டது. இதை ‘குடி’மகன்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் பேப்பர் கப்புகளுக்கு ரூ.5 முதல் 6 வரை வசூலித்து வந்ததால் பெரிதாக ‘குடி’ மகன்களின் கைகளை கடிக்கவில்லை.

ஆனால், மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பார்களில் ரூ.10 வசூலிக்கின்றனர். இதனால் ‘குடி’மகன்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பாக்கெட்டில் இருந்து ரூ.5 வரை அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளதே என குமுறினர். மேலும் பார் ஊழியர்களுக்கும், ‘குடி’மகன்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பார்களில் கண்ணாடி டம்ளர்களுக்கு ஒரே அளவில் குறைந்த வாடகை வசூலிக்க வேண்டும் என ‘குடி’மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோல 300 எம்எல் அளவுள்ள தண்ணீர் பாக்கெட் 65 பைசா என்ற விலையில் பார்களுக்கும், சிறு கடைகளுக்கும் சப்ளை செய்து வந்தனர். சில்லறை கடைகளில் ஒரு பாக்கெட் தண்ணீர் ரூ. 2 முதல் 3 வரை விற்பனை செய்து வந்தனர். ஆனால் டாஸ்மாக் பார்களில் ரூ.5 முதல் 6 வரை வசூலித்து வந்தனர். ஒவ்வொரு பார்களிலும் தினமும் 250 முதல் 500 மூட்டைகளுக்கும் மேலாக பாக்கெட் தண்ணீரை மொத்த விற்பனையாளர்கள் விற்பனை செய்து வந்தனர்.

இந்த தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு தற்போது தடை வந்துள்ளதால், 300 எம்எல் கொண்ட தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால் இவற்றின் தயாரிப்பு விலை அதிகம். இதனால் 300 எம்எல் தண்ணீர் பாட்டில் ஒன்று ரூ.3.50க்கு மொத்த விற்பனையாளர்கள் சப்ளை செய்கின்றனர். இவற்றின் அதிகபட்ட விலை ரூ.6 தான். கடைகளில் ரூ.4 முதல் 6 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பார்களில் ரூ.10 முதல் 12 வரை வசூலித்து விடுகின்றனர் என ‘குடி’மகன்கள் கவலை தெரிவிக்கின்றனர். நான் துணிப்பை அல்ல! குமரியில் பிளாஸ்டிக் கேரி-பேக்குகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக துணிப்பை போன்ற ஒருவகை கேரி-பேக்குகள் அறிமுகமாயின. ஆனால் இவற்றிலும் பிளாஸ்டிக் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஜவுளி கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் மற்றும் கடைகளில் நாம் வாங்கும் பிக்-ஷாப்பர் எனும் பைகளும் பிளாஸ்டிக் இழைகள் கலந்து தயாரிக்கப்படுபவை ஆகும்.

இவற்றுக்கும் தற்போது தடை உள்ளது என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவற்றுக்கு பதிலாக துணியால்(நெய்து) ஆன பைகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் இது சற்று விலை அதிகம். ரூ.40 முதல் 100 வரை ஆகலாம். ஆனால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானவை.ஞாபகம் வருதே... சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் தற்போது துணிப்பைகளையும்(நெய்தது), ஓட்டல்களில் உணவு வாங்க பாத்திரங்களையும் எடுத்து செல்கின்றனர். அதுபோல இறைச்சி கடைகளில் ேதக்கு, தாமரை இலைகள் மற்றும் பனை ஓலைகளில் இறைச்சி வகைகளை பார்சல் செய்து கொடுக்க தொடங்கி உள்ளனர்.
பல டீ கடைகளில் பார்சல் டீ, காபி வாங்க பாத்திரம் கொண்டு வரும்படி அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இதே போல் பல ஓட்டல்கள் உணவுகளை வாழை இலையில் பார்சல் காகித பைகளில் வழங்குகின்றனர். சாம்பார், ரசம் போன்ற திரவ உணவுகள் அலுமினிய பாயில் கவர்களில் வழங்கப்படுகின்றன.

இவற்றை பார்க்கும்போது 25 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் பலர் மனதிலும் வந்து சென்றது. முன்பெல்லாம் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் இறைச்சியை தாமரை இலை மற்றும் பனை ஓலைகளில் மட்டுமே வழங்கி வந்தனர். அதுபோல ஓட்டல்களுக்கு உணவு வாங்க செல்பவர்கள் கையுடன் தூக்கு பாத்திரங்களை எடுத்து செல்வர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holidays , Kumari Tasmak see, glass glass
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...