ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்இணைப்பு: வேதாந்தா கோரிக்கையை நிராகரித்தது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்இணைப்பு கோருவதை பரிசீலிக்க முடியாது என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. விசாரணையின் போது தீர்ப்பாய உத்தரவின் படி அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆலை மற்றும் சுற்றுவட்டாரங்களை ஆய்வு செய்தது. பின்னர் அக்குழு அளித்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்று பரிந்துரை செய்தது.

இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆட்சியர் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசுக்கள் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஆலை பராமரிப்பு பணிக்கு மின்இணைப்பு வழங்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருப்பதால், பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது எனவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று தெரிவித்து, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தேனூர் கிராம இளைஞர்கள் கோரிக்கை