×

கணவாய் மீன்களை பிடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி..! மத்திய அரசு துரோகம் செய்வதாக மீனவர்கள் சாடல்

கன்னியாகுமரி: அரபிக்கடல் பகுதியில் கணவாய் மீன்கள் பிடிப்பதற்கு வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கன்னியாக்குமரி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னியாக்குமரி முதல் கேரளா வரையிலான அரபிக்கடல் பகுதியில் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பது மத்திய மீன்வள ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மீன்களை பிடிக்க மத்திய அரசு வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு அனுமதி அளித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பது குமரி மாவட்ட மீனவர்களின் குற்றச்சாட்டாகும்.

அரபிக்கடலில் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை பிடிக்க வெளிநாட்டு கப்பல்களின் உதவியை மத்திய அரசு நாடியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.குமரி மாவட்டம், கேரளா மாநில பகுதிகளையொட்டி பரந்து விரிந்து காணப்படும் அரபிக்கடலில் பெருமளவில் கணவாய் மீன்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎம்எப்ஆர்ஐ மத்திய கடல் மீன் துறை ஆய்வு மைய விஞ்ஞானி டாக்டர் சுனில் முகம்மது தலைமையிலான ஆய்வு குழுவினர் கேரள மாநில பகுதிகளில் இருந்து 100 முதல் 150 கடல் மைல் தொலைவில் இந்த கணவாய் மீன்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவுடன் சேர்ந்த அரபிக்கடல் பகுதியில் மட்டும் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  கொச்சி, மங்களூர், கோவா துறைமுக பகுதிகளில் இருந்து இந்த மீன்கள் இருப்பிடத்திற்கு எளிதில் சென்றுவிடலாம். இவற்றை பிடிக்க இந்திய கம்பெனிகள் வெளிநாட்டு கப்பல்கள் உதவியையும் நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஸ்கூருட் ஜிகிங்’ என்ற முறையில் ஆழ்கடலில் கணவாய் மீன்கள் பிடிக்கப்படுகிறது.

ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கக்கூடிய விசைப் படகுகள் குமரி மாவட்டம் மற்றும் கேரளா பகுதிகளில் உள்ளன. ஆனால் ‘ஸ்கூருட் ஜிகிங்’  முறையில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடு தடையாக உள்ளன. சக்தி வாய்ந்த விளக்குகளை பயன்படுத்தி மீன்களை மேற்பரப்புக்கு வரச்செய்யலாம். ஆனால் இந்த விளக்குகள் மற்றும் பெலாஜிக் வலை பயன்படுத்த தடை உள்ளது. வெளிநாட்டு கப்பல் பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் மீன்பிடித்தால், மீனவர்களுக்கு பாதிப்பாக அமையும் என கேரள, தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு தனது முயற்சியை கைவிடாவிட்டால் கேரள மற்றும் குமரி மீனவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரித்துள்ளனர். கணவாய் மீன்களை பிடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது மத்திய அரசு மீனவர்களுக்கு செய்யும் துரோகம் என மீனவர்கள் சாடியுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Companies ,Cuttack ,fishermen ,government , Arabian Sea, Cuttlefish, Fishermen protest
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது