×

பிளாஸ்டிக் பொருட்கள் தடை எதிரொலி : குடந்தையில் பித்தளை, சில்வர் டவரா செட்டுகள் விற்பனை மும்முரம்

கும்பகோணம்: பிளாஸ்டிக் பொருட்கள் தடை எதிரொலியால் கும்பகோணத்தில் பித்தளை, சில்வர் டவரா செட்டுகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக்கினாலான பைகள், கப்புகள், கேரி பேக்குகள், தர்மாகூல், ஸ்ட்ரா, டேபிள் பிளாஸ்டிக் பேப்பர்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாற்றாக காகித சுருள்கள், தாமரை இலைகள், கண்ணாடி உலோக டம்ளர்கள், மூங்கில், மரப்பொருட்கள், காகித வைக்கோல், துணி, காகித, சணல் பைகள், காகித, துணி கொடிகள்,  மண்பாண்டங்கள், இலைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இதை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலான டீக்கடைகள், ஓட்டல்களிலும் பெரும்பாலும் பிளாஸ்டிக் கப்புகள், தர்மாகூல் டம்ளர், பிளாஸ்டிக் மூலாம் பூசப்பட்ட டம்ளர்களை பயன்படுத்தி வந்தனர். தமிழக அரசின் உத்தரவால் கும்பகோணத்தில் தற்போது அனைத்து பாத்திர கடைகளிலும் டீக்கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சில்வர் மற்றும் பித்தளையிலான டவரா செட்கள், டம்ளர்கள், குவளைகளை வாங்கி வருகின்றனர். இதனால் அனைத்து பாத்திர கடைகளிலும் சில்வர் மற்றும் பித்தளை டவரா செட்டுகள் வாங்க கூட்டமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பாத்திர வியாபாரி ராமலிங்கம் கூறுகையில், தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு முயற்சி எடுத்துள்ளதால் தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ள சில்வர் மற்றும் பித்தளை டவரா செட்கள் விற்பனை உயிர் பெற்றுள்ளது. சில்வர் பாத்திரங்கள் புழக்கத்தில் வருவதற்கு முன்பு கும்பகோணத்தில் பித்தளையிலான பாத்திரங்கள் அதிகமான புழக்கத்தில் இருந்துள்ளன. அதனால் காபி, டீயை பித்தளை பாத்திரங்களில் குடித்து வந்தனர். பின்னர் சில்வர் பாத்திரங்கள் வந்ததால் அதற்கு மாறிவிட்டனர். கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களின் வருகையால் சில்வர், பித்தளை டவரா செட்களுக்கு பெயர்போன கும்பகோணம்  தற்போது அழிந்து போகும் நிலையில இருந்து மீண்டும் உயிர் பெற்றுள்ளது. எனவே பித்தளை, சில்வர் பாத்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் மூலப்பொருட்களின் வரியை குறைத்தால் மீண்டும் கும்பகோணத்தில் பித்தளை, சில்வர் டவரா செட்டுகள், டம்ளர், குவளை உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Plastic, Kumbakonam, Silver
× RELATED தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 5...