×

ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகளே... உஷார் பாம்பன் பாலத்தில் வாகனம் நிறுத்தினால் அபராதம்

ராமேஸ்வரம்: பாம்பன் சாலைப்பாலத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி நிறுத்தியவர்களிடம் இருந்து வாகனத்திற்கு தலா ரூ.600 வீதம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப்பயணிகள், மண்டபம்-பாம்பனுக்கு இடையே கடல் மேல் அமைந்துள்ள சாலை பாலத்தின் மீது தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, கடலில் உள்ள தீவுகள், பாம்பன் ரயில் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டு புகைப்படம் எடுக்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பாலத்தின் இருபுறமும் நீண்டநேரம் நிறுத்தப்படுவதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதுடன், வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களின் ஒட்டுமொத்த எடையும் பாலத்தின் மேல் இருப்பதால், கப்பல் செல்லும் கால்வாயின் மேல் உள்ள ஸ்பான்கள் உறுதித்தன்மை குறைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முதல் பாம்பன் சாலைப்பாலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதுகுறித்து, கலெக்டர் வீரராகவராவ் கூறுகையில், ‘‘பாம்பன் பாலத்தில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பாலத்தின் மேல் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படுகிறது. பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் சாலைப்பாலம் துவங்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட உள்ளது. இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலாப் பயணிகள் இறங்கி பாலத்தில் நடந்து சென்று பார்வையிடவேண்டும். நேற்று முதல் பாம்பன் சாலைப் பாலத்தின் மேல் வாகனங்கள் நிறுத்துபவர்களிடம் தலா ரூ.600 அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் நிறுத்துவதை கண்காணிக்க பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட 35 பேர் அடங்கிய குழுவினர் இதனை கண்காணித்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்’’ என்றார். தடை விதிக்கப்பட்டது தெரியாமல் வெளியூரில் இருந்து வந்த சிலர் தங்கள் வாகனங்களை பாலத்தில் நிறுத்தினர். அவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். தடையை மீறிய உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram ,Ushar Pamban ,bridge , Rameswaram, Tourist, Pamban Bridge
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...