×

மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் குளறுபடி எதிரொலி கண்டக்டர் எழுதி தரும் ஒயிட்சீட்டை ஏற்க மறுப்பதால் பரிசோதகர் பயணிகள் மோதல்: எழுதி தந்தால் நடவடிக்கை: எம்டி எச்சரிக்கை

சென்னை: ‘எம்டிசி’யில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலமாக வழங்கப்படும் பயணச்சீட்டுகளில் சரியாக பிரின்ட் ஆகாத நிலையில், கண்டெக்டர்கள் அதன் பின்புறம் பேனாவில் எழுதிக்கொடுக்கின்றனர். அந்த சீட்டுகளை பரிசோதகர்கள் ஏற்காமல் அபராதம் விதிப்பதால் பயணிகளிடம் தினமும் மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் இந்த பஸ்களில், அலுவலகம், பள்ளி, கல்லூரி என பல இடங்களுக்கு செல்வோர் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி தினசரி, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மின்னணு பயணச்சீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மின்னணு டிக்கெட்டில் பயணி ஏறிய இடம், இறங்கும் இடம், நேரம், அதற்கான கட்டணம் போன்ற முழுவிபரமும் இடம்பெறும்.  

இந்நிலையில் சமீபகாலமாக சில பஸ்களில் வழங்கப்படும் மின்னணு இயந்திரங்களில், பிரின்ட் இல்லாமல் வெறும் ஒயிட் பேப்பர் மட்டுமே வெளியில் வருகிறது. அதில் பயணி ஏறிய இடம், இறங்கும் இடம் போன்ற எந்த விபரமும் இருப்பதில்லை. இதனால் கண்டக்டர் மெஷினில் இருந்து வரும் ஒயிட் பேப்பரின் பின்புறம், பயணி ஏறிய இடம், இறங்கும் இடம், அதற்கான கட்டணத்தை எழுதிக்கொடுத்து வருகின்றனர். இதே நடைமுறையே பல வழித்தடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்டிசி பஸ், சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பரிசோதகர்கள் இடையில் ஏறுகின்றனர். அவர்கள் பஸ்சில் இருக்கும் பயணி, டிக்ெகட் எடுத்திருக்கிறாரா என்பதை சோதனை செய்கிறார்கள். அப்போது கண்டக்டர் பேனாவில் எழுதிக்கொடுத்துள்ள டிக்கெட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் பயணிக்கும் - பரிசோதகர்களும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. அது மோதலில் முடிகிறது. இதனால் தேவையில்லாமல் பஸ் நிறுத்தப்பட்டு மற்ற பயணிகளுக்கு பிரச்னை ஏற்படுகிறது.

மேலும் சில பயணிகளிடம் டிக்ெகட் கேட்கும் பரிசோதகர்கள், கண்டக்டர் எழுதிக்கொடுப்பதை நம்ப மறுப்பதுடன், நீங்களே எழுதிக்கொண்டு வருகிறீர்களா என்று கேட்பதாக கூறப்படுகிறது. பயணி கண்டக்டர் தான் கொடுத்தார் என்று சொன்னால், அதற்குள் பஸ் சென்று விடுகிறது. இதுபோன்ற செயல்களால் பயணி அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் ஒருசில இடங்களில் கண்டக்டர்களும் மெமோ கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து ‘எம்டிசி’ மேலான் இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறுகையில், ‘‘மெஷினில் இருந்து வெளியில் வரும் போது அதில் பிரின்ட் வந்துவிடும். அவ்வாறு வரவில்லை என்றால், உடனே தற்காலிகமாக கையில் வைத்திருக்கும் பயணச்சீட்டை கண்டக்டர்கள் கொடுக்க வேண்டும். இதுபோன்று எழுதிக்கொடுப்பது தவறான செயலாகும். அவ்வாறு எழுதிக் கொடுப்பது குறித்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட கண்டக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

எம்-7 பஸ்சில் ஒயிட்சீட்
தி-நகரில் இருந்து திருவான்மியூருக்கு, எம்-7 வழித்தடத்தில் எம்டிசி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்சில் வேளச்சேரியில் இருந்து தரமணிக்கு டிக்கட் எடுத்தபோது, கண்டெக்டர் ஒயிட்சீட்டில் எழுதி கொடுக்கிறார். இதேபோல் பல வழித்தடங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்காலிகமாக கையில் வைத்திருக்கும் பயணச்சீட்டை கண்டக்டர்கள் கொடுக்க வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Electronic ticket, mess, passenger clash, MT Warning
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...