×

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்: மருத்துவமனையில் அனுமதி

பால்கர்: மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள சபாலே பகுதியைச் சேர்ந்தவர் அங்குஷ் சாவ்ரா. இவரது மனைவி சாயா(20). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்றுக் காலை சாயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், சாயாவை அவரது கணவர் அங்குஷூம் மாமியார் கமலி ஆகியோர் சபாலேயில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால், சாயாவை பரிசோதித்த அங்கிருந்த டாக்டர், பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் பால்கரில் உள்ள ஊரக அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். நேரம் குறைவாக இருந்ததாலும் சாயா பிரசவ வலியால் துடித்ததாலும் அவரை விரார்-தகானு ரயிலில் ஏற்றி பால்கருக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஓடும் ரயிலிலேயே சாயாவுக்கு பிரசவ வலி அதிகரித்து ஆண் குழந்தை பிறந்தது. ரயிலில் இருந்த சக பெண் பயணிகள் சாயாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதுபற்றி உடனடியாக பால்கர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் ஸ்டேஷன் மாஸ்டர், டாக்டரை உடனடியாக அழைத்தார்.

ரயில்வே பெண் போலீசார் மற்றும் பெண் துப்புரவு தொழிலாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ரயில் பால்கரை வந்தடைந்தபோது சாயாவுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. அவரை உடனே ஸ்டேஷனில் உள்ள ஓய்வறைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்களும் மற்றவர்களும் சேர்ந்து சாயாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் சாயாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த பிரசவத்துக்காக ரயில் பால்கர் ரயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சாயா மற்றும் அவரது குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் பால்கரில் உள்ள ஊரக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : babies , Running train, childbirth, twin babies
× RELATED தமிழ் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில்