×

மாயாவதி மிரட்டல் எதிரொலி ம.பி., ராஜஸ்தானில் வழக்குகள் வாபஸ்

புதுடெல்லி: ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அப்பாவி மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறாவிட்டால், ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று பகுஜன் சமாஜ்  கட்சித் தலைவர் மாயாவதி மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, அம்மாநில அரசுகள் வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளன. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், சட்டீஸ்கரை தவிர மற்ற 2  மாநிலங்களில் பெரும்பான்மைக்கு ஒரு சில இடங்கள், காங்கிரசுக்கு குறைவாக இருந்தன. இதனால் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும்  சுயேச்சைகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், ராஜஸ்தானில் 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திடீரென அக்கட்சிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,  ‘‘எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தலித் அமைப்புகள் சார்பில் ஏப்.2ம் தேதி    பாரத் பந்த் நடத்தப்பட்டது.  அப்போது அப்பாவி  மக்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றை ராஜஸ்தான், மத்தியப் பிரதேச அரசுகள் வாபஸ் பெறவேண்டும். இல்லாவிட்டால், காங்கிரசுக்கு அளித்து வரும்  ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்’’ என்றார்.இது காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, ம.பி.யில் பாரத் பந்த் தினத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குளை வாபஸ் பெற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல், தகுதி அடிப்படையில் வழக்குகள் வாபஸ்  பெறப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mayawati ,Rajasthan ,rapes , Mayawati,threatens, echoing rapes ,Rajasthan, Rajasthan
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு