×

புனேயில் உள்ள பீமா-கோரேகாவில் ஆயிரக்கணக்கான தலித்கள் குவிந்தனர் பிரிட்டீஷ் காலத்தில் நடந்த போரின் 201வது ஆண்டு விழா: அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு

புனே: பிரிட்டீஷார் காலத்தில் நடந்த போரின் 201வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புனேயில் உள்ள பீமா-கோரேகாவ் கிராமத்தில் நேற்று  ஆயிரக்கணக்கான தலித் மக்கள் குவிந்தனர்.கடந்த 1818ம் ஆண்டில் பிரிட்டீஷ் ராணுவத்துக்கும் அந்த பிராந்தியத்தை ஆண்டு வந்த பேஷ்வா படைக்கும் இடையே நடந்த கடுமையான சண்டையில் பிரிட்டீஷ் படை வென்றது. பேஷ்வா  ஆட்சியாளர்கள் சாதி ஒடுக்குமுறையை கடைப்பிடித்து வந்ததால் பிரிட்டீஷ் படையில் ஏராளமான தலித்கள் சேர்ந்து போரிட்டனர்.இந்த போரின் வெற்றியை குறிக்கும் வகையில், மகாராஷ்டிராவின் பீமா-கோரேகாவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தலித் மக்கள் இந்த போரின்  200வது ஆண்டை கொண்டாட இந்த கிராமத்தில் குவிந்தனர். அப்போது கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து கல்வீசி தாக்குதல் நடத்தினர். பல வாகனங்கள் தீ வைத்து  கொளுத்தப்பட்டன. இதையடுத்து அங்கு பயங்கர கலவரம் வெடித்தது. இதில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு பீமா-கோரேகாவ் போர் வெற்றியை கொண்டாட அந்த இடத்தில் நேற்று ஆயிரக்கணக்கான தலித் மக்கள் குவிந்தனர். இதனையொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க  மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

பீமா-கோரேகாவில் 20,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக அந்த பகுதியில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டிருப்பதுடன் 350 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. புனே-அகமதுநகர்  நெடுஞ்சாலையில் போக்குவரத்து வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. பிமா-கோரேகாவ் கிராமத்துக்குள் நுழைய சில மத தலைவர்கள் மற்றும் சில குழுக்களுக்கு போலீசார் அனுமதி  மறுத்துள்ளனர். 64 பேர் ஏற்கனவே நகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது தவிர முன்னெச்சரிக்கையாக 1,211 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலையில் இருந்தே தலித் மக்கள்  பீமா-கோரேகாவ் கிராமத்துக்கு வரத் தொடங்கினர். போர் வெற்றியை குறிக்கும் வகையில் பிரிட்டீஷார் அந்த இடத்தில் அமைத்து இருக்கும் வெற்றித் தூணை (விஜய்ஸ்தம்ப்) பார்வையிட நேற்று பிற்பகல் 1 மணி வரை சுமார் 1 லட்சம் பேர்  வந்ததாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். போரில் உயிரிழந்த தலித் வீரர்களின் பெயர்கள் இந்த வெற்றித்தூணில் பொறிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு வரை தொடர்ந்து கூட்டம்  வந்து கொண்டே இருந்தது. அவர்கள் அனைவரும் வெற்றித்தூணில் வீர வணக்கம் செலுத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dalits ,war ,Pune ,Bhima-Goregaon ,Britain , Thousands,Dalits,Bhima-Goregaon , Pune ,celebrating 201 years,Britain:
× RELATED மத்தியில் காங்கிரஸ் ஆட்சி...