×

ஆபாச பாடல்கள், அசைவுகள் காரணமாக டிக் டாக் ‘ஆப்’பை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்று சமூக ஊடகமான டிக் டாக் என்ற பெயரிலான செல்பேசி செயலி கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீனத்தைச் சேர்ந்த பைட் - டான்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியில் 15 வினாடிகளுக்கு பயனாளிகள் தங்களின் கருத்தை படம் பிடித்து வெளியிட முடியும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. டிக் டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் வீடியோக்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது,

திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு பதிவுக்கு ஒரு முறை ஆயிரம் பேரிடமிருந்து வரவேற்பு கிடைத்தால், அடுத்த முறை அதை இரு மடங்காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூடுதலாக ஆபாச சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர். இது சொந்த வாழ்க்கையையும், சமூகத்தையும் சீரழிக்கும் என்பது தான் மிகவும் வருத்தத்திற்கு உரிய விஷயமாகும். டிக் டாக் செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கும், இளைய தலைமுறையினருக்கும் பெற்றோர் எடுத்துக் கூறி அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும். டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dick Doc ,Ramadoss , Pornographic songs, movements, tick dog 'App, ban, Ramadoss
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...