×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். 2019ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.  தலைமை செயலகம் வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் தனபால், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டப்பேரவை மண்டபத்துக்கு அழைத்து வருவார்கள். அதைத்தொடர்ந்து சரியாக 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்த 4 நாள் பேரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதன்படி, நாளை (3ம் தேதி) சட்டப்பேரவை மீண்டும் கூட்டப்படுகிறது. அன்றையதினம் திமுக தலைவரும் திருவாரூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும்.

அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து பேசுவார்கள். அதேபோன்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும். இதையடுத்து பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். பின்னர் மீண்டும் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பேரவை கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் அனுமதி அளிக்காமல் உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். அதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், மேகதாது அணை விவகாரம், ஆசிரியர்கள் போராட்டம், விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழக ஆளுநர் உரையுடன் இன்று முதல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,TNA ,Ponnarlal , The political situation, the Tamil Nadu Congress, the Governor Panwarilal
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்