×

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் மயிலாடுதுறை யானையுடன் நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உற்சாகம்

நெல்லை: கோவை அருகே தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் மயிலாடுதுறை யானையுடன் நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை கும்மாளமிட்டு ஒன்றாக சுற்றி வருகிறது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கின்ற வகையில் 2003ம் ஆண்டில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் தொடங்கப்பட்டது. 2003ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில் துவங்கிய முகாம் தொடர்ந்து அங்கேயே 4 ஆண்டுகள் நடந்தது. அதன்பின்னர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 11வது ஆண்டு முகாம் வழக்கம் போல் தேக்கம்பட்டியில் கடந்த டிச. 14ம்தேதி துவங்கியது.

6 ஏக்கர் நிலப்பரப்பில் யானைகள் முகாம், அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, தீவன மேடை, சமையல் கூடம் மற்றும் யானைகளுக்கான கொட்டகைகள், நடை பயிற்சிக்கான பாதை, குளியல் மேடை, ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜன.30ம் தேதி நிறைவடையும் 48 நாட்கள் முகாமில் கோயில்கள், மடங்களைச் சேர்ந்த 29 யானைகள் பங்கேற்றுள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து 8 யானைகள் இந்த முகாமிற்கு சென்றுள்ளன. முகாம்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்லும் யானைகள், நவம்பர் கடைசியிலேயே இந்த முகாமை எதிர்பார்க்கும் வகையில் அதன் உடலியக்கத்தில் மாறுதல்கள் தென்படுவதாக பாகன்கள் தெரிவித்தனர். முகாமிற்கு சென்ற யானைகள் ஒவ்வொன்றும் தங்கள் சக தோழர் அல்லது தோழியை தேர்ந்தெடுத்து ‘குஷி’ மூடுக்கு மாறிவிடுகின்றன.

இந்த ஆண்டு முகாமிற்கு சென்றுள்ள நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியும், மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோயில் யானை அபயம்பாளும் மிகவும் அன்யோன்யமாக பழகுகின்றன. இந்த 2 யானைகளும் முகாமில் தினமும் ஒரே நேரத்தில் விழிப்பது, நீராடுவது, நடைப்பயிற்சிக்கு செல்வது, உணவருந்துவது என ஒன்றாகவே செல்கின்றன. இதுகுறித்து முகாமில் உள்ள நெல்லையப்பர் கோயில் யானை பாகன்கள் ராமதாஸ், விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது:தற்போது முகாமில் காந்திமதி யானை மிகவும் உற்சாகமாக காணப்படுகிறது. இந்த யானை மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோயிலின் அபயம்பாள் யானையுடன் எப்போதும் இணை பிரியாமல் சுற்றி வருகிறது. கடந்த ஆண்டு முகாமில் நெல்லையப்பர் கோயில் யானை வந்த போது அதன் எடை 4450 கிலோவாக இருந்தது. இதை பரிசோதித்த கால்நடை டாக்டர்கள், யானையின் எடையை 4 ஆயிரமாக குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி தினமும் 10 கி.மீ நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றதோடு உணவாக பசுந்தீவனத்தை மட்டுமே வழங்கினோம்.

இதன் காரணமாக கடந்த ஓராண்டில் காந்திமதி யானையின் எடை 150 கிலோ குறைந்து தற்போது 4300 கிலோவாக உள்ளது. மேலும் 300 கிலோ குறைக்க வேண்டும் என்று தற்போது முகாமில் அறிவுறுத்தியுள்ளனர். இங்கும் தினமும் 10 கி.மீ நடைபயிற்சி வழங்கப்படுகிறது. சளி பிடிக்காமல் இருக்க அனைத்து யானைகளுக்கும் கண்டங்கத்திரி, தூதுவளை ஆகிய மூலிகைகள் அடங்கிய லேகியம் வழங்குகின்றனர். மேலும் மூலிகை உணவுகள், பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வப்போது கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்கின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் முகாமிற்குள் காட்டு யானைகள் வந்தன. இப்போது அந்த தொந்தரவு இல்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து கடந்த ஆண்டு 9 யானைகள் முகாமிற்கு அழைத்து வரப்பட்டன.  திருக்குறுங்குடி வள்ளி யானை உடல் நலக்குறைவு காரணமாக புத்துணர்வு முகாமிற்கு வரவில்லை. இவ்வாறு பாகன்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gandhiji ,elephant enthusiast ,Mayiladuthurai ,camp , Thekkampatti Rejuvenation Camp, Mayiladuthurai, the Nellaiyappar Temple with the Yani, Gandhiji Elephant, enthusiasm
× RELATED தஞ்சாவூர் காந்திஜி சாலை ராணி வாய்க்காலில் ரெடிமேட் கான்கிரீட் பாலம்