கஜா புயலின் கோரத்தாண்டவத்தை அடுத்து மீண்டும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை

வேதாரண்யம்: கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்குப் பிறகு நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும் வரத் தொடங்கின. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலமாகும். இந்த சமயத்தில் ரஷ்யா, ஈரான், ஈராக், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், சைபீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 257 வகையான பறவைகள் வந்து செல்லும்.

இதில் ஆர்ட்டிக் பிரதேசத்தில் இருந்து 18 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு கோடியக்கரைக்குப் பறந்து வரும் ஆர்ட்டிக்கேன் எனப்படும் கடல் ஆலா பறவைகள் தனிச்சிறப்பு பெற்றவை. கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி வீசிய கஜா புயல் நாகை மாவட்டத்தை பெரும் பேரழிவுக்கு தள்ளியது. இதில் கோடியக்கரையில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. புயலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து கோடியக்கரையில் அதிகரித்துள்ளது. கொசுஉள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்குநாரை, சிவப்புகால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலைவாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வரும் காச்சலாத்தி எனப்படும் இன்டியன் பிட்டா, உள்ளான் வகைப் பறவைகள் என 25 வகைப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. இதனால் தற்போது கோடியக்கரை பறவைகள் சரணாலயம் களை கட்ட தொடங்கியுள்ளது.

புயலுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வரத்து தடைபட்டுள்ள நிலையில் சரணாலயத்தைச் சுற்றியுள்ள மண் பாதையை சரிசெய்து தர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: