×

நச்சு ஆலைக்கு எதிராக 'மரணத்தின் மடியில் மழலையர்கள் 'குறும்படம்: தடையை மீறி வணிகர் சங்கம் சார்பில் வெளியீடு

சென்னை: போபால் விஷ வாயு கசிவின் போது ஏற்பட்டதை போல் ஸ்டெர்லைட் ஆலையாலும் ஆபத்து ஏற்படலாம் என எடுத்துரைக்கும் வகையில் மரணத்தின் மடியில் மழலையர்கள் என்ற குறும்படம் தடையை மீறி திரையிடப்பட்டது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வணிகர்கள் சங்கம் சார்பில், 12 நிமிடம் கொண்ட குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது. போபால் விஷவாயு சம்பவத்தை போல் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும், மக்கள் பாதிக்க நேரிடலாம் என்பது குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 28ம் தேதி தூத்துக்குடியில் மரணத்தின் மடியில் மழலையர்கள் குறும்படம் திரையிட முடிவு செய்யப்பட்டது.

ஆனால், காவல் துறையினர் இந்த குறும்படத்தை வெளியிட தடை விதித்த நிலையில், தடையை மீறி பத்திரிகையாளர்களுக்கு இன்று காட்சிப்படுத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தமிழக காவல் துறை இந்தத் திரையிடலுக்கு தற்போது  தடை விதித்துள்ளது. மேலும் இது குறித்து திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி மக்களின் நலனுக்காக, தங்களால் தயாரிக்கப்பட்டுள்ள ‘ மரணத்தில் மடியில் மழலையர்கள் என்ற குறும்படத்தை, சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்க வளாகத்தில் திரையிட உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள் . இதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை. ஆகவே, திரையிடலுக்கு காவல் துறை ஆட்சேபணை தெரிவிக்கிறது. காவல் துறையின் ஆணையையும் மீறி குறும்படம் வெளியிடப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன், நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று இத்திரைப்படத்தை வெளியிட இருப்பதாக தெரிவித்தார். நச்சு ஆலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகக் கூடாது என்றும், போபாலில் ஏற்பட்டது போன்ற ஒரு பாதிப்பு நாட்டில் எங்கும் ஏற்படக்கூடாது என்றும் தெரிவித்தார். மேலும் எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதையடுத்து, வாட்ஸ் ஆப் மூலம் இத்திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுருப்பதாக குறும்படத்தை இயக்கிய இயக்குனர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Loss ,Death ,Traders Association , Toxic mill, short film, merchant union, lapse of death in the lap of death
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...