×

செட்டித்தாங்கல் - ஆயங்குடி இடையே இடிந்து விழும் அபாயத்தில் தரைப்பாலம் : அச்சத்தில் வாழும் 10 கிராம மக்கள்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே செட்டித்தாங்கல்  ஆயங்குடி இடையே உள்ள தரைப்பாலம் உடையும் அபாயத்தில் உள்ளதால் 10 கிராம பொதுமக்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டித்தாங்கல்  ஆயங்குடி இடையே உள்ளது வடிவாய்க்கால் பாலம் என கூறப்படும் ஆயங்குடி இணைப்பு தரைப்பாலம். அரியலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பெய்யும் மழைநீரின் ஒரு பகுதி ஷண்டன் அருகே உள்ள வடவாற்றின் கீழ் உள்ள சுரங்க வாய்க்காலின் மூலம் இந்த வடிகால் வாய்க்காலுக்கு தண்ணீர் வரும். மேலும் ஆயங்குடி, செட்டித்தாங்கல், ஷண்டன் உள்ளிட்ட பகுதி வயல்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரும் இதில் கலக்கும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆயங்குடி இணைப்பு பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆதனூர், பூந்தாழைமேடு, குணவாசல், ஆயங்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக காட்டுமன்னார்கோவிலுக்கு வந்து போவதற்கும், மேலும் செட்டித்தாங்கல், கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மருத்துவமனை, வங்கி, உரம் போன்ற விவசாய இடுபொருட்களை வாங்க ஆயங்குடி செல்வதற்கும் இந்த வடிகால் வாய்க்கால் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.

மேலும் இதில் தனியார் சிற்றுந்துகள், இருசக்கர வாகனங்கள் என நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழியாகதான் செல்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த வடிகால் வாய்க்கால் பாலம் சிறிது சிறிதாக இடிந்து வருகின்றது. மேலும் பாலத்தின் மையத்தில் ஆங்காங்கே ஆபத்தான வகையில் அதிக விட்டம் கொண்ட பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதோடு மிக மோசமான காயங்களையும் ஏற்படுத்துகின்றன.

இங்கிருந்து ஆயங்குடிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கடந்த ஜூன் 16ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தியின் தாக்கமாக கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை போடப்பட்டது. ஆனால் தரைப்பாலம் போடப்படவில்லை. இதனால் புதிய சாலை உயர்ந்தும் பாலம் மிக தாழ்வாக உள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, கடந்த வருடம் இந்த வடிகாலை தூர்வாரிய ஒப்பந்ததாரர்கள் அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் ஆலோசனை ஏதும் கேட்காமல் வயல்களிலிருந்து தண்ணீர் வடிய பொருத்தப்படும் கான்கிரீட் குழாய்களை விளைநிலத்திற்கும் மேல் உயர்த்தி பொருத்திவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் தண்ணீர் வயல்களில் இருந்து சாலைவழியாக வழிந்து பாலத்தின் பக்கவாட்டிலும், பாலத்தின் மீதும் சென்று வாய்க்காலில் விழுகின்றன. இதனால் பாலத்தின் மேல்தளத்தில் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் சில பாகங்கள் இடிந்து விழுந்து வருகின்றன என்றனர்.மிகவும் ஆபத்தான வகையில் உள்ள இந்த பாலத்தால் ஏதேனும் மிகப்பெரிய அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை ஆய்வுசெய்து சீரமைக்க வேண்டும். மேலும் புதிய மதகுகள் அமைத்து, மேல்மட்ட பாலமாக உயர்த்தி கட்டி கொடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : collapse , Chettithangal, ayankuti, Causeway, villagers
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...