×

5 லட்சம் பேர் வாழ்வாதாரம் கேள்விக்குறி: சங்கரன், தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர்

இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் தொடர்பான ஒரு கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்து எப்போது அமல்படுத்துகிறதோ அதுவரைக்கும் இந்த பிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்கலாம் என்று நாங்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனென்றால், நாங்கள் இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளோம். அந்த கடன்களை எல்லாம் திருப்பி செலுத்தவும், தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை காக்கவும், எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று தான் கேட்கிறோம். இந்த குறைந்த பட்ச கோரிக்கையை கூட ஏற்காமல் சுமார் 5 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தோடும், அவர்களின் குடும்பங்கள் பாதிப்படைய தமிழக அரசு இந்த செயலை செய்கிறது. இவர்களின் நலன் கருதியாவது அரசு இந்த தடையை தள்ளி வைக்க வேண்டும்.

 பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் வேலையை நம்பி 1 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். மறுசுழற்சி செய்யும் 1,200 நிறுவனங்கள் உள்ளன. அவைகளுக்கு ஊக்கம் அளிக்காமல் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளை தடை செய்கிறது அரசு; மாறாக, பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மறுசுழற்சி செய்ய முடியாத சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிற அந்த பொருட்களுக்கு ஊக்கமளிக்க சிறு,குறு வணிகர்களையும், உற்பத்தியாளர்களையும் ஒழிக்க பார்க்கிறது. நாங்கள் செய்யும் பிளாஸ்டிக் தொழிலை பன்னாட்டு நிறுவனங்கள் செய்யப்போகின்றன.

அவர்கள் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை தயாரிப்பதால் சுற்றுச்சூழல் இன்னும் மோசமாகும். ஷாம்பு, ஆயில், நொறுக்கு தீனி பாக்கெட்டுகளை மறு சுழற்சி செய்ய முடியாது. ஆனால், அரசு தடை செய்துள்ள 14 வகையான பொருளை மறு சுழற்சி செய்யலாம். ஆனால், அதை தான் தடை செய்துள்ளனர். பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதால் எந்த சுற்றுச்சூழல் பிரச்னையும் கிடையாது. ஆனால், பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி கண்டபடி தெருவில் வீசுகின்றனர். அதனால், சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படுகிறது. பொதுமக்கள் வீசும் பலவகை பொருட்களில் பிளாஸ்டிக்கும் ஒன்று.

 இது வெறும் குப்பை பிரச்னை தான். பிளாஸ்டிக் பிரச்சனை அல்ல. அப்படியிருக்கும் போது குப்பையை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு காணாமல் பிளாஸ்டிக்ைக தடை செய்வது தவறான செயல். குப்பை பிரச்னையில் கவனத்தை திசை திருப்பவே இது போன்ற நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. குப்பை பிரச்னைக்கு தீர்வு காணாமல் அரசு பிளாஸ்டிக்கை தடை செய்வது என்று கூறுவது ஏமாற்று வேலை.  காரணம், குப்பையில் 4 % தான் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளது. 96 சதவீதம் மற்ற குப்பைகள் தான். அதுவும் இது, முழுமையான தடையும் இல்லை. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு கொடுத்துள்ளனர். இப்போது, அந்த 4% குப்பையும் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் அந்த இடத்தை நிரப்பி விடும். அது தான் உண்மை.

உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை சரியாக அகற்றுவதில்லை. சென்னை மாநகராட்சி கடந்த 2000ல் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று குப்பைகளை பிரித்தெடுக்கும் திட்டம் கொண்டு வரப்போவதாக அறிவித்தது. ஆனால், அந்த திட்டத்தை முழுமையாக ஏன் அமல்படுத்தாமல் இருக்கின்றனர். பொதுமக்கள் குப்பைகளை பிரித்து கொடுத்தால் கூட அவர்கள், ஒரு குப்பையாக தான் கையாளுகின்றனர். குப்பை பிரிப்பதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோல்விதான். தற்போது கொளுந்து விட்டு எரியும் பிரச்சனையை மறைக்க, 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sankaran ,Pandy Plastic Association ,Tamil Nadu , Livelihood,Question,Sankaran, Chairman of Tamil Nadu,Pandy,Plastic Association
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...