×

மலேசியாவில் இருந்து கப்பலில் 55 ஆயிரம் டன் மணல் வருகிறது: எண்ணூர் துறைமுகத்தில் இறக்க ஏற்பாடு

சென்னை : மலேசியாவில் இருந்து 55 ஆயிரம் டன் மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு ஜனவரி 7ம் தேதி புதிய கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து, ₹548 கோடி செலவில் 30 லட்சம் டன் மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. அதில் முதல்கட்டமாக 56,750 மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. அதன் விற்பனை அக்டோபர் 8ம் தேதி தொடங்கிய நிலையில், 50 நாட்களில் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டது.இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 52 ஆயிரம் டன் மணல் மலேசியா துறைமுகத்தில் இருந்து நவம்பர் 20ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து, கடந்த நவம்பர் 27ம் தேதி 55 ஆயிரம் டன் மணல் ஏற்றி கொண்டு அபிராடி நாரி என்ற பெயர் கொண்ட 3வது கப்பல் எண்ணூர் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

இதில், இரண்டாவது கப்பலில் இருந்த மணல் முற்றிலுமாக விற்று தீர்ந்து விட்டது. இந்த நிலையில் 3வது கப்பலில் 25 ஆயிரம் டன் மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மலேசியாவில் இருந்து மணல் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வானிலை மாற்றம் காரணமாக கப்பல் அங்கிருந்து கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 55 ஆயிரம் டன் மணலை ஏற்றி கொண்டு கப்பல் மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்த கப்பல் ஜனவரி 7ம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை இருக்கும் மணலை வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால், மணல் கேட்டு புக்கிங் செய்து காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், கூறும் போது, ‘பொங்கல் பண்டிகை முதல் வீடு, வீடாக மணல் விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் அமலுக்கு வரும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Malaysia ,harbor ,Ennore , 55 thousand tons,sand ,Malaysia,Arranging,Ennore harbor
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...