×

ரயில்வே அனுமதி இல்லாமல் தொடங்கியதால் கொரட்டூர் உபரிநீர் கால்வாய் பணிகளை முடிப்பதில் சிக்கல்

* முறையாக திட்டமிடாததே காரணம் * அதிகாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு

அம்பத்தூர்: அம்பத்தூர் ஏரி மழைக்காலங்களில் நிறையும்போது அதன் உபரிநீர் அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் வடக்கு அவென்யூ சாலை பகுதியில் உள்ள கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரிக்கு செல்கிறது.  இக்கால்வாய்  பராமரிப்பு இல்லாததாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் சுருங்கி கிடந்தது. இதனால், கடந்த சில ஆண்டாக மழைக்காலத்தில் அம்பத்தூர் ஏரி நிறைந்து உபரிநீர், மழைநீர் கால்வாய் வழியாக செல்ல முடியாமல் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள கம்பெனிகளுக்குள் புகுந்து இயந்திரம்,  மூலப்பொருட்கள் சேதமடைந்து வந்தன.  எனவே, இந்த உபரிநீர் கால்வாயை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், கம்பெனி அதிபர்களும் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, 1.9 கிலோ  மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த பணிக்கு மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை சார்பில் 2015ம் ஆண்டு ₹16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்த பணி முடிவதற்கு 2 ஆண்டு திட்ட  காலம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், கொரட்டூர் வடக்கு அவென்யூ சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் மட்டும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து கொரட்டூர் ஏரி வரை செல்லும் கால்வாய் பணி மட்டும் இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில்  போடப்பட்டுள்ளது. கொரட்டூர் வடக்கு அவென்யூ சாலையில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாய் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதால், கால்வாய் கட்டுமான பணிக்கு ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, பணியை தொடங்கி இருக்க  வேண்டும்.ஆனால், அவ்வாறு ரயில்வே அனுமதி பெறாமல், கால்வாய் பணிக்கு டெண்டர்  விடப்பட்டுள்ளது. தற்போது, ரயில்வே அனுமதி இல்லாததால், பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பல கோடி ரூபாய்  செலவில் ெதாடங்கிய உபரிநீர் கால்வாய் பணியை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சரியான திட்டமிடல் இன்றி அதிகாரிகள் அவசர கதியில் கால்வாய் பணியை தொடங்கியுள்ளனர். தற்போது ரயில்வே அனுமதி இல்லாததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  இதில் கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி வருகிறது. இதனால், சுற்றுப் பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கோரி பல முறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பியும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். உடனே ரயில்வே துறையிடம்  அனுமதி வாங்கி போர்க்கால அடிப்படையில் கால்வாய் பணிகளை முடிக்க வேண்டும்.’’ என்றனர்.

அதிகாரிகள் முறைகேடு
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘உபரிநீர் கால்வாய் கட்டும்போது அடித்தளத்தில் சிமென்ட் பூச்சு போடக்கூடாது. தற்போது கொரட்டூர் உபரிநீர் கால்வாய் அடியில் கான்கிரீட் பூச்சு போடப்பட்டுள்ளது. அதில் தற்போது கம்பெனி,  குடியிருப்புகளின் கழிவுநீர் விடப்படுகிறது.  இதிலிருந்து பார்த்தால், அதிகாரிகள் திட்டமிட்டு உபரிநீர் கால்வாய்க்கு பதில் கழிவுநீர் கால்வாய் கட்டி உள்ளனர். கட்டப்பட்ட ஒரு கிலோ மீட்டர் கால்வாய்க்கு சுமார் ₹12 கோடி  செலவிட்டு உள்ளனர். கிடப்பிலுள்ள 900 மீட்டர் கால்வாய்க்கு ₹4 கோடிதான் இருப்பு உள்ளது. இந்த கால்வாய் கட்டியதில் அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். மீதி கால்வாயை கட்ட அரசு கூடுதல் நிதி ஒதுக்கினால் தான்  பணிகளை முடிக்க முடியும்’’ என்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : start ,Korattur ,railways , Railways , permission,completing,channel ,works
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்