×

பாலம் கட்டும் பணிக்கு மீண்டும் பூமி பூஜை அமைச்சர், எம்எல்ஏ ஆதரவாளர்கள் நேருக்கு நேர் மோதல்-வாக்குவாதம்: பண்ருட்டி அருகே பதற்றம்

பண்ருட்டி: பாலம் கட்டும் பணிக்கு மீண்டும் பூமி பூஜை போட முயன்றதால் அமைச்சர், எம்எல்ஏ ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு மோதிக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள பெண்ணை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு ₹26 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த பாலம்  மேல்குமாரமங்கலம்-விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை இணைக்கும் வகையில் உள்ளது. அமைச்சர் சம்பத்தின் சொந்த ஊர் மேல்குமாரமங்கலம். பாலம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் பழனிசாமிக்கு  நன்றி தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பேனர் வைப்பதிலேயே அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ.  சத்யாபன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் போலீசார் அதிரடியாக இரு தரப்பினரின் பேனர்களையும்  அகற்றினர். இதனிடையே, பாலம் கட்டும் பணி கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நடந்து வந்தது.

 இந்நிலையில் நேற்று திடீரென பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யாபன்னீர்செல்வம் புதிதாக மீண்டும் பூமி பூஜை நடத்த வருகைதர இருந்தார். இதனை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை ஆற்றுக்கு செல்லும் வழியில்  அமர்ந்திருந்தனர். அப்போது எம்.எல்.ஏ. ஆதரவாளர் காரில் வந்தபோது உள்ளேவிட மறுத்தனர். இதனால் கார் திரும்பி சென்றது. தகவலறிந்த டிஎஸ்பி சுந்தரவடிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமைச்சர் சம்பத்  ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது, `பூமி பூஜை போடும்போதுகூட எம்.எல்.ஏ. தொகுதி என்பதால் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் எங்கள் உரிமையை விட்டுகொடுக்க மாட்டோம் என கூறினர். இதனிடையே, எம்.எல்.ஏ.  ஆதரவாளர்கள்  வந்து, பூமி பூஜை போடுவதற்கு தயார் செய்யுங்கள், எம்எல்ஏ வந்துவிடுவார் என்றனர். இதனை அறிந்த அமைச்சர் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து ஏற்கனவே பூமி பூஜை செய்து பணிகள் துவங்கிய  நிலையில் மீண்டும் பூமி பூஜை போடக்கூடாது என கூறி கோஷமிட்டனர்.  இதன்காரணமாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பூமி பூஜையும் நடைபெறவில்லை. எம்எல்ஏவும் அங்கு வரவில்லை. சுமார்  3 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhoomi Pooja Minister ,supporters ,MLA ,confrontation ,Panrutti , Earth, Puja again, bridge ,construction work, Panruti
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...