×

விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் விவகாரம் முகத்தில் கரி பூசிக்கொண்டு பெண்கள் நூதன போராட்டம்

ஈரோடு: திருவண்ணாமலை, வேலூர். சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களின் வழியாக சட்டீஸ்கர் மாநிலத்துக்கு புதிய மின் வழித்தடங்கள் அமைக்கிறது. இதற்காக, விளை நிலங்களில் உயர் மின்  கோபுரங்கள் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என்றும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் 13 மாவட்டங்களை உள்ளடக்கி 8 இடங்களில் விவசாயிகள் கடந்த  17ம் தேதியில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு மூலக்கரையில் 13ம் நாளான நேற்று, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முகத்தில் கரி பூசி கொண்டு விவசாயிகள் மற்றும் பெண்கள் என 200 பேர், கோஷங்கள் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  தா.பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து விவசாயிகளிடம் பேசினர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன்சாவடியில், விவசாயிகள் 7வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது  எனக்கூறி, தங்களது கண்கள் மற்றும் வாயை கைகளால் பொத்திக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே சாமண்டூரில், விவசாயிகள் தங்களை ஒருவரோடு ஒருவர்  சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, கோஷங்கள் எழுப்பினர். திருவண்ணாமலை அடுத்த தென்னரசம்பட்டு கிராமத்தில், விவசாயிகள், பெண்கள் ஆகியோர் மடியேந்தி பிச்சை கேட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு அரசு தயார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நேற்று இரவு நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காலங்களில் விவசாய நிலங்களில்தான் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது. அதேபோல தான் இப்போதும், மத்திய அரசின் நிறுவனம் உயர் மின்கோபுரங்களை அமைத்து வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக  விவசாயிகளை பாதுகாப்பதுதான் முக்கியம். எனவே, தமிழக அரசு திறந்த மனதுடன் இருக்கிறது. விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் தயாராக இருக்கிறோம். எப்போது வந்தாலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று  உறுதியளித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farms ,women , setting, high millcode , farmland, Women's struggle
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...