×

பொங்கல் பண்டிகைக்கு முன் சட்டத்துக்கு புறம்பான டாஸ்மாக் பார்களை மூட வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: பொங்கல் பண்டிகைக்குள் சட்டத்திற்கு புறம்பான அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டத்திற்கு புறம்பான டாஸ்மாக் பார்கள் அதிகரித்து வருகிறது. சுமார் 1,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்தநிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி தலைமையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், முதுநிலை மண்டல மேலாளார்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோர் அடங்கிய மாதாந்திர ஆய்வுகுழு  கூட்டம் கடந்த 27ம் தேதி எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு குழு கூட்டத்தில், சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் டாஸ்மாக் பார்களை கண்டறிந்து ஜனவரி 1ம் தேதி முதல்  ஜனவரி 15ம் தேதிக்குள் (பொங்கள் பண்டிகைக்குள்) மூட வேண்டும்.

அதற்குள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் டாஸ்மாக் பார்களை கண்டறிந்து அவற்றை மூட அதிகாரிகள் திடீர் ஆய்வை நடத்த வேண்டும். குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு பிறகு சட்டத்திற்கு புறம்பான மதுபான கடைகள்  எதுவும் இருக்கக்கூடாது.
இதேபோல், நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதை கண்டறிந்து தடுக்க வேண்டும் என கூட்டத்தில் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அமைச்சர் கடும் உத்தரவை  பிறப்பித்துள்ளார்.   
அப்படி பொங்கல் பண்டிகைக்குள் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது மற்றும் சட்டத்திற்கு புறம்பான டாஸ்மாக் பார்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட  மேலாளர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார். இதேபோல், ஊழல் குற்றசாட்டு வரும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆய்வு குழு கூட்டத்தில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்த கடும் எச்சரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் தற்போது டாஸ்மாக் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்  டாஸ்மாக் பார்களை மூட அதிகாரிகள் அதிரடி ஆய்வை நடத்த உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Pongal ,lawmakers , Pongal festival, Unlawful, TASMAC bars
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா