×

குண்டும் குழியுமாக காணப்படுகிறது தோப்பூர் சாலை தூக்கிவீசுது ஆளை

காரியாபட்டி : காரியாபட்டி-தோப்பூர் சாலை வாகனம் செல்ல லாயக்கற்றதாக குண்டும் குழியுமாக உள்ளது. புதிய தார்சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டியிலிருந்து தோப்பூர், புதுப்பட்டி வழியாக திருச்சுழி ராமேஸ்வரம் செல்லும் சாலை 22 கிமீ தூரம் உள்ளது. இந்த பகுதி மக்கள் வணிகம், வேலைகளுக்கு காரியாபட்டி, அருப்புகோட்டை, மதுரை வரை தினமும் இந்த சாலையில் சென்று வருவது வழக்கம். இந்த ரோடு ஐந்து வருடங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாகவே உள்ளது. பல தடவை விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியாகியுள்ளது. இரவில் வாகனம் செல்வதில் சிரமமாக உள்ளது. அப்பகுதி மக்கள் பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் காது கொடுத்து கேட்பது இல்லை.

அவசர தேவைக்கு 108 ஆம்புலன்சை அழைத்தால் வாகனம் வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது என மக்கள் புலம்புகிறார்கள். இந்த சாலையில் வரும் பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நகரங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் போக முடியவில்லை. பள்ளி, கல்லூரி, பணிகளுக்கு செல்பவர்கள் தாமதம் ஏற்படுகிறது. இது போன்று சுமார் 5 வருடங்களாக மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதி மக்கள் தரமான சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை என்றால் போராட்டம் நடத்தவும் தயராக உள்ளனர்.

ஆட்டோ டிரைவர் முனியாண்டி கூறுகையில், ‘‘இந்த ரோட்டில்தான் தினசரி போய் வருகிறோம். புதுப்பட்டி வரைக்கும் வண்டி ஓட்டவே முடியாது. பள்ளமும் மேடுமாக உள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஓட்டி போக முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிள்ளைகள் மிகவும் கஷ்டப்பட வேண்டியுள்ளது. எனவே பொது மக்கள் நலன் கருதி இந்த சாலையை சரிசெய்து தர வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

புதுப்பட்டி வில்சன் கூறுகையில், ‘‘திருச்சுழி ரோடு என்றாலே வாரம் இரு விபத்து கண்டிப்பாக நடக்கிறது.  ரோடு பல்லாங்குழி மாதிரி உள்ளது. பால் விற்பனை செய்பவர்கள், காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வரவேண்டியுள்ளது. இது கிராமங்கள் நிறைந்த பகுதி என்பதால் அன்றாட தேவைகளை நிறைவேற்ற காரியாபட்டி வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சாலையை சரி செய்து தரவேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thuppur Road ,Throwing Throw , Kariyappatti ,thopur ,road ,danger condition
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...