×

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை லண்டன் டாக்டர், தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்: ஓ.பி.எஸ், விஜயபாஸ்கரும் ஆஜராகின்றனர்

சென்னை: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, தம்பிதுரை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 19 பேருக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மன்  அனுப்பப்பட்டுள்ளது.ஜெயலலிதா மர்ம மரனம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 145 பேரிடம் ஆணைய நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். ஆனாலும் பல்வேறு  கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலைதான் உள்ளது.குறிப்பாக, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச்செல்லாமல் இருந்தது ஏன், ஜெயலலிதாவுக்கு கடைசிவரை இதய வாழ்வில் ஏற்பட்ட அடைப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்யாதது ஏன், அப்போலோவில் ஜெயலலிதா  இருந்த போது, சிசிடிவி கேமராவை அணைத்து வைக்கச்சொன்னது யார், ஜெயலலிதாவுக்கு திடீரென கார்டியாக் அரஸ்ட் வர காரணம் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் விடை கிடைக்காமல் ஆணையம் இறுதி  அறிக்கையை தயார் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 18ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், டிசம்பர் 20ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.  அவர்கள் இருவரும் ஆணைய விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டிருந்தனர்.

இதை தொடர்ந்து, ஜனவரி 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், ஜனவரி 8ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் விசாரணைக்கு ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களிலும் அங்குதான் தங்கியிருந்தார். அவர், தினமும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அப்போலோ டாக்டர்களிடம்  ஆலோசனை நடத்தினார்.ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கள் குறித்து, சுகாதாரத்துறை அமைச்சரிடம் முன்கூட்டியே தகவல் ெதரிவிக்கப்பட்டு விடும். அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வது தொடர்பாக கடந்த  2016 அக்டோபர் மாதத்தில் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் இதுதொடர்பாக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, அப்போலோ டாக்டர்கள் ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பிறகும்  அவரை வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்தது ஏன் என்பது குறித்து அவரிடம் ஆணையம் சார்பில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 9ம் தேதி லண்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே  ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரிடம் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, லண்டர்  டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து ஆலோசனை வழங்கியவர். அதன்படியே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்துள்ளனர். அவர்தான் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு  அழைத்துச் செல்லலாம் என்று ஆலோசனை கூறியவர். இரண்டாவது முறை வந்தபோது, ஜெயலலிதாவின் உடல்நிலை தேறியுள்ளதால், அவரை மேல் சிகிச்சைக்காக அழைத்துச்செல்ல வேண்டியது இல்லை என்று தெரிவித்தார்.  கடந்த 2016 டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் வந்தபோது வீடியோ கான்பரன்ஸ் மூலம் டாக்டர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சையளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே அவரிடம்  இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தினமும் வந்து சென்றுள்ளார். அவர் ஜெயலலிதாவை தனி அறைக்கு மாற்றும் போதும், ஸ்கேன் செய்ய கொண்டுசென்ற போதும்  பார்த்துள்ளதாக டாக்டர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் ஜெயலலிதாவை, தம்பிதுரை நேரில் ஒருமுறை பார்த்ததாகவும், டாக்டர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனவே அவரிடமும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இவர் ஜனவரி 11ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி ஜெயலலிதாவின் சிறப்பு ெசயலாளராக இருந்த சாந்தா ஷீலா நாயர்,  ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ஜனவரி 3ம் தேதி ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி உட்பட 13 பேர் ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka ,Vijayabhaskar ,OPS ,doctor ,London , Investigation ,Jayalalithaa's , younger brother, Vijayapaskar ,present
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...