×

லாதம் 176, நிகோல்ஸ் 162 ரன் விளாசல் இலங்கைக்கு 660 ரன் இலக்கு

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணிக்கு 660 ரன் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இந்த டெஸ்டில் டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச, நியூசிலாந்து 50 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வாட்லிங் 46, டிம் சவுத்தீ 68 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சுரங்கா லக்மல் 5, லாகிரு குமாரா 3 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, டிரென்ட் போல்ட் வேகத்தை சமாளிக்க முடியாமல் 104 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (41 ஓவர்). குசால் மெண்டிஸ் 15, ரோஷன் சில்வா 21 ரன், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். கடைசி 4 வீரர்கள் தொடர்ச்சியாக டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. நியூசி. பந்துவீச்சில் போல்ட் 15 ஓவரில் 8 மெய்டன் உட்பட 30 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தினார். சவுத்தீ 3, கிராண்ட்ஹோம் 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 74 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்திருந்தது. லாதம் 74, டெய்லர் 25 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். டெய்லர் 40 ரன்னில் வெளியேற, லாதம் - நிகோல்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 214 ரன் சேர்த்தது. இருவரும் சதம் விளாசி அசத்தினர்.

லாதம் 176 ரன் (370 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து நிகோல்சுடன் இணைந்த கிராண்ட்ஹோம் அரை சதம் அடித்தார். நியூசிலாந்து 153 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன் குவித்து 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நிகோல்ஸ் 162 ரன் (225 பந்து, 16 பவுண்டரி), கிராண்ட்ஹோம் 71 ரன்னுடன் (45 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 660 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்துள்ளது (14 ஓவர்). குணதிலகா 4 ரன் எடுக்க, கருணரத்னே டக் அவுட்டானார். கேப்டன் சண்டிமால் 14, குசால் மெண்டிஸ் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Latham 176 ,Nichols ,Sri Lanka , Latham 176, Nichols scored 162 runs , Sri Lanka to score 660 runs
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...