×

ரூ.43.82 கோடியில் 2,000 கறிக்கடை, 6,000 பண்ணைகள் திறப்பு கேரளா சிக்கன் திட்டம் 30ம் தேதி துவக்கம்

5 ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வர்த்தக இலக்கு நிர்ணயம்

தமிழக கறிக்கோழி சப்ளையில் பெரும் பின்னடைவு?

சென்னை: கேரளாவில் வரும் 30ம் தேதி, ரூ.43.82 கோடி மதிப்பில், ‘கேரளா சிக்கன்’ என்ற திட்டம் துவக்கப்பட உள்ளதால், தமிழக கறிக்கோழி மார்க்கெட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநில அரசு, இத்திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி வர்த்தக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் மூலம் வாரத்திற்கு சராசரியாக 70 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்கின்றனர். இதில், வாரம்தோறும் 30 லட்சம் கறிக்கோழிகள் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. 40 லட்சம் கறிக்கோழிகள் தமிழகத்தில் விற்பனையாகிறது.

பண்ணை கொள்முதல் விலை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பிசிசி) சார்பில், தினமும்  நிர்ணயம் செய்யப்படுகிறது. கேரளாவிற்கு தேவையான கறிக்கோழிகளில், ஐந்தில் ஒரு பங்கு தமிழகத்தில் இருந்து சப்ளையாகிறது. பொதுவாக, புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகைகளின்போது, கறிக்கோழி விலை குறைந்து, பண்டிகை முடிந்ததும் உயரும். விலை ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில், விலை நிர்ணயம் செய்யப்பட்டு தொழில் நடத்தி வருகின்றனர். கேரளாவுக்கு கறிக்கோழி சப்ளை தொழிலை நம்பி, லட்சக்கணக்கான தமிழக குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில்,  கேரள மாநிலத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ‘கேரளா சிக்கன்’ என்ற திட்டம் வரும் 30ம் தேதி துவக்கப்படுகிறது.

மாநில முதல்வர் பினராய் விஜயன், மலப்புரம் பகுதியில், அன்றைய தினம் திட்டத்தை துவக்கி வைக்கிறார். வயநாட்டில் உள்ள பிரம்மகிரி டெவலப்மென்ட் சொசைட்டியுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, பிரம்மகிரி டெவலப்மென்ட் சொசையிட்டி தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது:
கேரள அரசின் கனவு திட்டமான ‘கேரளா சிக்கன்’ திட்டத்தின்கீழ் ரூ. 43.82 கோடி மதிப்பில், 2,000 கறிக்கடைகள், 6,000 பண்ணைகள் திறக்கப்படும். இத்திட்டத்தால், 20,000 மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டப்படி, ஒருநாள் வயதுடைய கோழிக்குஞ்சு, உணவு, மருந்து ஆகியன வழங்கப்படும். ஒரு கோழி குஞ்சுக்கு ரூ.11 அளிப்பதன் மூலம், 49 நாட்கள் வளர்ப்புக்கு பின் ரூ.68க்கு விற்கப்படுகிறது.

உயிருடன் உள்ள கோழி கிலோ ரூ. 87 முதல் ரூ. 90 வரையும் கிடைக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கான வர்த்தக இலக்காக ரூ.1,500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், இடைத்தரகர்கள் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர முடியும். விற்பனை நிலையங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை உரங்களாக மாற்றுவதால், பண்ணை உரிமையாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு கிருஷ்ணதாஸ் கூறினார். இதுகுறித்து, பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘கேரள அரசின் புதிய திட்டத்தினால், தமிழக கறிக்கோழி வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். அவர்கள், தமிழகத்தில் உள்ள உழவர் சந்தை போல், கோழி வளர்ப்பு திட்டத்தை ஊக்குவித்து கறிக்கோழி கடையை துவக்க உள்ளனர். குறைந்த விலை மற்றும் தரம் என்று விளம்பரம் செய்வதால், மக்கள் இந்த கடைகளுக்குத்தான் செல்வார்கள்’ என்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
கறிக்கோழி நுகர்வு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கேரள அரசின் திட்டம் குறித்து முழுமையாக தெரியவில்லை. இருந்தாலும், தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்படும் கறிக்கோழி வர்த்தகத்தில் பாதிப்பு இருக்காது. இன்றைய நிலையில், உற்பத்தி செலவு அதிகம் என்பதால், அவர்கள் திட்டத்தை செயல்படுத்துவது கஷ்டம். ‘கேரளா சிக்கன்’ திட்டம் துவக்கத்தால், நுகர்வு மேலும் அதிகரிக்கும். பிராய்லர் கோழிக்கு ‘கலர்’ அடித்து நாட்டுக்கோழி என்று சந்தையில் விற்கின்றனர். நாட்டுக் கோழி வளர்ப்பு என்பதே, பண்ணையில் அடைத்து வைத்து வளர்த்து விற்பனை செய்வது அல்ல. இவ்வாறு அவர் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farms , Kerala, chicken plan, pumpkin,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...