×

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை: ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளது. ரிச்சர்ட் பீலே வரும் 9ம் தேதி ஆஜராகுமாரும், தம்பிதுரை 11ம் தேதி ஆஜராகுமாரும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை ஐஏஎஸ் அதிகாரிகள், அப்போல்லோ மருத்துவர்கள் என பலதரப்பட்டோரிடமும் விசாரணையை முடித்திருக்கக்கூடிய நிலையில் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஜனவரி 9ம் தேதியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை 11ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ரிச்சர்ட் பீலேவை பொறுத்தவரை அவர் லண்டனில் இருக்கிறார். மேலும் சிகிச்சைகளுக்காக வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய நிலையில் இருப்பதனால் அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கூடிய வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக விசாரணை ஆணையம் அமைத்திருக்க கூடிய வளாகத்திலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வழக்கறிஞர் மற்றும் நீதிபதி கேட்கக்கூடிய கேள்விகளுக்கு ரிச்சர்ட் பீலே ஆஜராகி பதில் அளிப்பார். அதனை தொடர்ந்து சசிகலா தரப்பு மற்றும் அப்போல்லோ தரப்பினர் கூட குறுக்கு விசாரணை செய்ய இருக்கிறார்கள். இதுதொடர்பாக அனைத்துமே லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவின் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடைபெற இருக்கிறது.

தம்பிதுரையை பொறுத்தவரை பல்வேறு விதமான கருத்துக்களையும், தகவல்களையும் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களையும் எழுப்பி இருந்தார். மேலும் வெளிநாட்டு சிகிச்சைக்கு ஜெயலலிதாவை அழைத்து செல்ல வேண்டும் எனவும், ரிச்சர்ட் பீலே வந்து ஜெயலலிதாவை பார்த்தபிறகு தெரிவித்திருந்தார். மிகவும் முடியாத நிலையில் இருப்பதால் உடனடியாக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பேச்சை துவங்கியவர் தம்பிதுரை ஆவார். இதுவரைக்கும் நடைபெற்ற விசாரணையிலும் கூட அப்போல்லோ மருத்துவ நிர்வாகத்திடம் ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை? யாராவது தடுத்தார்களா? தற்போது ஏன் ஜெயலலிதாவை அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கேள்விகளை எழுப்பி இருந்தார். ஆகவே தம்பிதுரைக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

மேலும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 18ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. 20ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த 2 தேதிகளும் மாற்றப்பட்டு தற்போது ஜனவரி 7ம் தேதி விஜயபாஸ்கரும், 8ம் தேதி பன்னீர்செல்வமும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. முன்னாள் தலைமை செயலாளரும் அரசு ஆலோசகராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் சாந்தாஷீலா நாயர் இருவரும் மறுவிசாரணைக்காக ஜனவரி 2ம் தேதி ஆஜராக உள்ளனர். ஜனவரி மாதத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்வதற்கான தீவிர பணிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Richard Pele ,Arundhasamy ,inquiry commission ,London , Arumugasamy Investigation Commission, Richard Pele, Jayalalitha
× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விசாரணை...