×

தமிழகத்தில் ஐபோன் எக்ஸ் உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் ஐபோன் எக்ஸ் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புக்கு பெரும் வரவேற்பு உள்ளது. வெளிநாட்டு சந்தைகள் காலை வாரியபோதும், ஐபோன் விற்பனை இந்தியாவில் அதிகரித்திருந்தது. இதனால் இந்தியாவின் பக்கம் கவனத்தை திருப்பிய ஆப்பிள் நிறுவனம், இங்கு ஐபோன் உற்பத்தியை துவங்கியது. முதலில் ஐபோன் எஸ்இ எனப்படும் மிகச்சிறிய மாடல் மட்டுமே பெங்களூருவில் உள்ள தொழிற்சாலையில் அசெம்ப்ளிங் செய்யப்பட்டது. பின்னர் இங்கு 6எஸ் மாடல்கள் அசெம்ப்ளிங் செய்யப்பட்டன.  ஆனால், உயர் ரக மாடல்கள் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, அங்கிருந்து இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், உயர் ரக மாடல்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 பாக்ஸ்கான் நிறுவனம் சீனாவை சேர்ந்த ஜியாமி நிறுவன போன்களை அசெம்ப்ளிங் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சென்னை அருகே பெரும்புதூரில் தொழிற்சாலை அமைத்துள்ளது. இங்கு ஐபோன் எக்ஸ் உட்பட உயர் ரக ஆப்பிள் போன் மாடல்கள் அசெம்ப்ளிங் செய்யப்பட உள்ளதாக ஆப்பிள் இந்தியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்த சுமார் 2,500 கோடி டாலர் (சுமார் ₹1,77,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் ஐபோன் தயாரிப்பும் அடங்கும் என கூறப்படுகிறது. ஆனால், பாக்ஸ்கான் நிறுவனம் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் ஐபோன் எக்ஸ் உள்ளிட்ட உயர் ரக மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டால் சுமார் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Apple , Apple,project,produce iPhone X,Tamil
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!