×

மஜத கவுன்சிலர் மஞ்சுளா கண்ணீர் : மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

பெங்களூரு: மஜத கவுன்சிலர் மஞ்சுளா தர்ணா போராட்டம் நடத்தி  கண்ணீர் விட்டதால் பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு மாநகராட்சி கூட்டம் தொடங்கிய உடனே மஜத கவுன்சிலர் மஞ்சுளா நாராயணசாமி தனக்கு பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சபை வழக்கத்தின்படி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பேசிய பிறகு பூஜ்ஜிய நேரத்தில் அனுமதி தருவதாக மேயர் கங்காம்பிகே கூறினார். இதைத்தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி ஆளுங்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக அடுக்கினார். கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் இதற்கு பதில் அளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து மேயர் கங்காம்பிகே, கமிஷனரிடம் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். மேயரின் உத்தரவின்பேரில் கமிஷனர் மஞ்சுநாத்பிரசாத் பதில் அளிப்பதற்கு எழுந்த போது மஜத கவுன்சிலர் மஞ்சுளா நாராயணசாமி கையில் பதாகையுடன் மறுபடியும் எழுந்து நின்றார். அத்துடன் மேயர் இருக்கை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மஞ்சுளா, தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார். மேயர் கங்காம்பிகே, கமிஷனர் பதில் அளித்த பிறகு அனுமதி தருகிறேன் என கூறினாலும் எந்த பயனும் விளையவில்லை. மஜத தலைவர் நேத்ரா நாராயண், ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ், முன்னாள் ஆளுங்கட்சி தலைவர் ரிஸ்வான் உள்ளிட்டோர் கவுன்சிலர் மஞ்சுளாவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி மற்றும் பாஜ பெண் கவுன்சிலர்கள் மஜத கவுன்சிலர் மஞ்சுளாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். பாஜ கவுன்சிலர்கள் அனைவரும் தங்களின் ஆதரவை தெரிவித்து, அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடைசி வரை மேயர் கங்காம்பிகே, மஜத கவுன்சிலர் மஞ்சுளா பேசுவதற்கு அனுமதி வழங்கவில்லை. கேள்வி பதில் நேரத்தில் முதல் ஆளாக அனுமதி தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

அதன்பிறகு மஜத தலைவர் நேத்ராநாராயண் உள்ளிட்டோரின் சமாதானத்தை தொடர்ந்து மஞ்சுளா நாராயணசாமி தனது போராட்டத்தை கைவிட்டு அவரின் இருக்கைக்கு திரும்பினார். மாநகராட்சி கூட்டத்தில் மஜத கவுன்சிலர் மஞ்சுளா நாராயணசாமி தனது வார்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டிற்கு நிதி கிடைக்கவில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் கண்ணீர் சிந்தினார். இந்த காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சபையில் பரபரப்பு நிலவியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manjula ,crowd ,crowd meeting , Majestic councilor Manjula tear, crowd,crowd meeting
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு