எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு நோய் பாதிப்பின்றி குழந்தை பிறக்க சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை

மதுரை: எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு, நோய் பாதிப்பின்றி குழந்தை பிறக்க 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன், மனைவி மீனா (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). எட்டு மாத கர்ப்பிணியான மீனாவுக்கு, எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே திருசிலுவையாபுரத்தை சேர்ந்த மணி (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தானமாக செலுத்திய எச்ஐவி ரத்தமே மீனாவுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த விவரம் தெரியவரவே மன உளைச்சல் காரணமாக மணி, நேற்று முன்தினம் தனது ஊரில் ‘எலி பேஸ்ட்’ சாப்பிட்டு தற்கொலைக்கு முன்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று அதிகாலை மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள விஷ முறிவு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மகப்பேறு தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள தனி அறையில் மீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை குறித்து அரசு மருத்துமனை டீன்  (பொறுப்பு) சண்முகசுந்தரம்  கூறும்போது, ‘‘வாலிபருக்கு எலிமருந்து பேஸ்ட்  சாப்பிட்டதற்கான தனி  சிகிச்சையுடன், எச்ஐவிக்கான சிகிச்சையும்  அளிக்கப்படுகிறது. இதேபோல்  கர்ப்பிணிக்கும் எச்ஐவி சிகிச்சையுடன்,  8 மாத  சிசுவிற்கும் தனி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகப்பேறு மருத்துவத்துறைத்தலைவர் சாந்தி தலைமையில் டாக்டர்கள் கீதாஞ்சலி,  பாலாஜிநாதன், கண்ணன், தனலட்சுமி, மோகன்குமார்,  முத்துக்குமார் மற்றும்  ரத்தவங்கி தலைவர் டாக்டர் சிந்தா, எச்ஐவி பிரிவு டாக்டர் ரஞ்சித் ஆகிய 9  பேர் கொண்ட சிறப்பு டாக்டர் குழு கர்ப்பிணிக்கு சிகிச்சை வழங்கும்.  2019,  ஜன. 30க்குள் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். பிறக்கும் குழந்தைக்கு நோய்த்தொற்றை  கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாகவே, ‘டெனாபெரிர்’, ‘லாம்யூடின்’,  ‘ப்ரேவிரன்ஸ்’ ஆகிய 3 மாத்திரைகள் 90 நாட்களுக்கு தாய்க்கு வழங்கப்படும்.  குழந்தை பிறந்த பிறகும், எச்ஐவி தொற்று பரவாமல் இருக்க 42 நாட்களுக்கு  குழந்தைக்கு ‘நிவாரசின்’ மாத்திரை வழங்கப்படும். முழுக்க எச்ஐவி பாதிப்பின்றி குழந்தை பிறக்க முயற்சி செய்யப்படும் ’’ என்றார்.

உயர் அதிகாரிகள் வரை நடவடிக்கை தேவை கர்ப்பிணியின் கணவர் கண்ணீர் பேட்டி

கர்ப்பிணியின் கணவர் கூறும்போது, ‘‘தமிழக அரசு எனது குடும்பத்தையே நாசமாக்கி விட்டது. ரத்தத்தை உரிய முறையில் பரிசோதித்து என் மனைவிக்கு ஏற்றி இருந்தால், அவருக்கு எச்ஐவி பாதிப்பு வந்திருக்காது. இதுவரை அமைச்சர்களோ, அதிகாரிகளோ எங்களை வந்து பார்த்து, குறைந்தபட்சம் ஆறுதல் கூட கூறவில்லை. இந்த விஷயத்தில் ஒரு சிலர் மீது மட்டுமே நடவடிக்கை என்று இல்லாமல், உயர்மட்ட அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். என் மனைவிக்கு ஏற்பட்ட நிலை, வேறு யாருக்கும் இனி ஏற்படக்கூடாது. தமிழக அரசின் தவறால்தான் நாங்கள் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து, எனக்கும், என் மனைவிக்கும் உரிய வேலை வாய்ப்பை இப்போதே உத்தரவாக வழங்க வேண்டும். தேசிய அளவில் மிகப்பெரிய குற்றத்தை இந்த அரசு செய்திருக்கிறது. நான் வசிக்கும் பகுதியில் கடைசி வரை என் மனைவியை, பிறக்கும் குழந்தையை பாதுகாக்கும் வகையில் அரசு வீடு கட்டித்தர வேண்டும். எதைப்பெற்றாலும், எங்களால் இந்த பாதிப்பை சரிக்கட்ட முடியாது’’ என்றார்.

மாநில அளவில் ரத்த வங்கிகள் கண்காணிக்கப்படும்

மதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு, ரத்தம் தந்த வாலிபரை நேற்று, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் சந்தித்து கவுன்சலிங் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘முன்பு மாவட்ட அளவில்தான் ரத்த வங்கிகள் கண்காணிக்கப்பட்டன. இனிமேல் மாநில அளவில் கண்காணிக்கப்படும்.  தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் ரத்ததானம் வழங்குகின்றனர். அரசு சார்பில் தமிழகம் முழுவதும் 89 ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகிறது.

இதேபோல், தனியார் வங்கிகளும் ஏராளமாக உள்ளன. எய்ட்ஸ் பாதித்த ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது தமிழகத்திலே இதுவே முதல்முறையாகும். தொடர்ந்து சாத்தூர், சிவகாசி மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொண்டு, குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>