×

தென் ஆப்ரிக்காவுக்கு 149 ரன்கள் இலக்கு: ஒலிவியர் அபார பந்துவீச்சு

செஞ்சூரியன்: செஞ்சூரியன் டெஸ்டின் 2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா அபாரமாக பந்துவீச பாகிஸ்தான் தடம் புரண்டது. ஒலிவியர் 5 விக்கெட் வீழ்த்த, தென் ஆப்ரிக்காவுக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது. அபாரமாக பந்துவீசிய தென் ஆப்ரிக்காவின் ஒலிவியர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுடன் இருந்தது. பவுமா 38, ஸ்டெய்ன் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

ஸ்டெய்ன் 23 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த டி காக் பொறுப்புடன் ஆடினர். மறுமுனையில் பவுமா அரைசதம் அடித்தார். பவுமா 53 ரன்னிலும், டி காக் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ரபாடா 19 ரன் விளாசினார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர், ஷாகீன் ஷா அப்ரிடி தலா 4, ஹசன் அலி 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி மீண்டும் தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது.

அரைசதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் கடைசி வரை போராடி 65 ரன் எடுத்து ஸ்டெய்ன் வேகத்தில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஒலிவியர் 2வது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ரபாடா 3, ஸ்டெய்ன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, தென் ஆப்ரிக்காவுக்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக, முன்கூட்டியே 2ம் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா 2ம் இன்னிங்சில் களமிறங்க உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : South Africa ,bowling ,Olivier , South Africa, Olivier, Pakistan
× RELATED பாரா டென்பின் பவுலிங்; 4 தங்கப் பதக்கம் வென்றது தமிழகம்